ஈராண்டுகளுக்குப்பின் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது.
கடந்த மாதம் சாங்கி விமானம் வழியாக ஏறத்தாழ 1.14 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.
கொவிட்-19 பரவத் தொடங்கியதால் எல்லைகள் மூடப்பட்டு இருந்த ஈராண்டுகளுக்குப் பிறகு பயணிகள் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியிருப்பது இதுவே முதன்முறை. ஆயினும், 2019 மார்ச் மாதத்தை ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை 20.3%தான்.
அதே நேரத்தில், ஓராண்டுக்குமுன் பதிவான பயணிகள் எண்ணிக்கையைவிட இது ஆறு மடங்கிற்குமேல் அதிகம் என்பது சாங்கி விமான நிலையத்தின் மீட்சி சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது.
சாங்கி விமான நிலையத்தில் கடந்த மாதம் மொத்தம் 13,200 விமானங்கள் வந்து சென்றன. இது, 2020 மார்ச் மாதத்தைவிட 62.9% அதிகம். ஆயினும், விமானங்கள் கையாண்ட சரக்குகளின் அளவு 3.18% குறைந்து, 152,000 டன்னாகப் பதிவானது. கொவிட்-19 நிலவரம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளால் விநியோகத் தொடரில் ஏற்பட்ட இடையூறுகளே இதற்குக் காரணம் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் குறிப்பிட்டது.
ஒட்டுமொத்தத்தில், இவ்வாண்டின் முதல் காலாண்டில் சாங்கி விமான நிலையம் 2.56 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த அளவில் இது 15.6%தான்.
ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கு அதிகமானோர் சென்று வந்தனர்.
ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, 81 விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சாங்கி விமானம் நிலையம் வழியாக வாரத்திற்கு 2,800 விமானங்களை இயக்கின. இப்போதைக்கு அவ்விமான நிலையம், சரக்கு மற்றும் பயணிகள் விமானங்கள் மூலமாக 47 நாடுகளைச் சேர்ந்த 121 நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையக் குழுமம் நேற்று வெளியிட்ட தனது 'சாங்கி ஜர்னீஸ்' மாதாந்திர மின்சஞ்சிகையில் இந்தப் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அனைவருக்கும் இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூர் தனது கதவுகளைத் திறந்துவிட்டிருப்பதால் வரும் மாதங்களில் விமானப் பயணத் துறை மேலும் மீட்சிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட்-19 தொற்றுக்குள் முன்பிருந்த நிலையில் பாதியை எட்ட சிங்கப்பூர் விரும்புகிறது.

