இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கும் அவரின் சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சேவிற்கும் இடையே உரசல் நிலவுவதாக இலங்கை ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
அதிபரின் செயலதிகாரத்தைப் பறித்து, நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில், 19வது சட்டத்திருத்தத்தில் திருத்தம் முன்மொழிய பிரதமர் மகிந்த தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
கடும் பொருளியல் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் வேளையில், கடந்த பல வாரங்களாகவே அரசாங்கத்திற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக அறியப்படுகிறது என்று 'டெய்லி மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களில் ஒருசாரார் பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் இன்னொரு சாரார் அதிபர்தான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனராம்.
அண்மைய அமைச்சரவை நியமனங்கள் முழுக்க முழுக்க அதிபரின் தேர்வு என்றும் அதன் தொடர்பில் தம்முடன் ஆலோசனை நடத்தவில்லை என்பதால் அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மகிந்த கலந்துகொள்ளவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
மூத்த அமைச்சர்கள் சிலரைப் புதிய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மகிந்த விரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், இளைய, புதிய அமைச்சரவைதான் வேண்டும் என்று அதிபர் கோத்தபாய வற்புறுத்தியதாகவும் அது போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தி, நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று அவர் நம்பியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அதிபரின் செயலதிகாரத்தை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற நாயகரிடம் நேற்று சமர்ப்பித்தது. 20வது சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவும் 19வது சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யவும் அத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

