கொவிட்-19: ஏப்ரல் 26 முதல் பாதுகாப்பு இடைவெளி அகற்றம்; ஊழியர் அனைவரும் வேலையிடம் திரும்பலாம்
சிங்கப்பூரில் வரும் 26ஆம் தேதி முதல் எஞ்சிய கொவிட்-19 கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை அகலுகின்றன. மக்கள் ஒன்றுகூடி உறவாடுவதற்கான அளவு வரம்பு இனி இருக்காது.
அதேபோல, வேலை இடங்களிலும் ஊழியர்களுக்கு வரம்பு இருக்காது.
இரண்டு ஆண்டுகளில் முதன்முதலாக சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு இறங்கி இருக்கிறது.
சிங்கப்பூர், 2020 பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஆரஞ்சு நிலையில் இருந்து வருகிறது.
கட்டுப்பாடுகள் பெரிய அளவில் அகற்றப் படுவதாக சுகாதார அமைச்சு நேற்று அறி வித்தது. கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த குழுவின் இணைத் தலைவரான சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சிங்கப்பூரின் கொவிட்-19 பயணத்தில் இது முக்கியமான ஒரு மைல்கல் என்றார்.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளில் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு மங்கி வருகிறது. இந்த நிலையில் வரும் மாதங்களில் புதிய தொற்று தலைதூக்கலாம் என்ற ஆபத்தும் இருக்கிறது.
புதிய உருமாறிய கிருமி தொற்றக்கூடும் என்பதும் மற்றொரு கவலை தரும் ஆபத்தும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் வழக்கநிலைக்குத் திரும்புவதற்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் மாற்றங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, சேஃப் என்ட்ரி, டிரேஸ்டுகெதர் ஆகியவற்றின் பயனீடு பெரும்பாலான இடங்களில் இனி இருக்காது. இருந்தாலும் இரவு நேரக் கேளிக்கை நிலையங்களில், பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் இவை அவசியம்.
உணவகங்கள், உணவங்காடி நிலை யங்கள் போன்ற உணவு, பான நிலையங்களிலும் டிரேஸ்டுகெதர், சேஃப் என்ட்ரி இன்னமும் தேவைப்படும்.
குடும்ப வருகையாளர்களுக்கான வரம்பும் அகற்றப்படும். வீட்டுத் திருமணங்கள், ஈமச் சடங்குகள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும். தனிப்பட்டவர்கள், குழுக்களுக்கு இடையில் பாதுகாப்பு இடைவெளி நிபந்தனையும் இனி தேவைப்படாது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஊழியர்கள் அனைவரும் அடுத்த செவ்வாய் முதல் வேலையிடத்திற்குத் திரும்பலாம். வேலையிடங்களில் அவர்கள் நேரடியாக மற்றவர்களுடன் அணுக்க தொடர்பில் இல்லாதபோது முகக்கவசத்தை அணிய வேண்டிய தேவையும் இல்லை.
இருந்தாலும் வேலையிடங்களில் ஊழியர்கள் ஒவ்வொருவரும் சமூக பொறுப்புடன் நடந்துகொண்டு முகக்கவசம் அணியாதபோது பொருத்தமான அளவுக்கு பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்து வரவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய மாற்றங்கள் நடப்புக்கு வருகிறது என்றாலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டை கைக்கொள்ளும்படி முதலாளி களுக்கு அமைச்சு ஊக்கமூட்டியது.
இருந்தாலும் வேலையிடங்கள் தவிர இதர உட்புற இடங்களில் முகக்கவசம் இன்னமும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய நிகழ்ச்சிகளில் இவ்வளவு பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற வரம்பும் இனி மேல் இருக்காது.
இப்போதைய மாற்றங்களையும் சேர்த்து பார்க்கையில் சிங்கப்பூரின் பாதுகாப்பு நிபந்தனைகளில் கிட்டத்தட்ட அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. உட்புற இடங்களில் முகக்கவசங்களை அணியவேண்டும் என்ற விதிமுறை மட்டுமே தொடரும் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருந்து வரும்படி சிங்கப்பூரர்களை பணிக்குழு வலியுறுத்தியது. தொற்று இன்னமும் முழுமையாக ஒடுங்கிவிடவில்லை என்பதை அது சுட்டிக்காட்டியது.
இதனிடையே, நேற்றைய கொவிட்-19 அமைச்சுகள் நிலைப் பணிக்குழு கூட்டத்தில் அமெரிக்காவில் இருந்தபடி காணொளி வழி பேசிய நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், இந்த மாற்றங்கள் மிகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் என்றார்.
கொவிட்-19 கிருமியை ஒடுக்குவதில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி கூறிய திரு வோங், கிருமி இன்னமும் முற்றிலும் ஒடுங்கிவிடவில்லை என்பதை நினைவூட்டினார்.
புதிய உருமாறிய கிருமி தலைகாட்டும். அது எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தேவை ஏற்படும் பட்சத்தில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டி இருக்கலாம் என்றார் திரு வோங்.

