கொவிட்-19 கட்டுப்பாடுகள் அதிக அளவில் தளர்த்தப்பட்டிருப்பது சிங்கப்பூரைக் கிட்டத்தட்ட முன்பு இருந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
நாளை மறுநாள் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரர்கள் தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளுமாறும் நேற்று தாம் வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாகப் பிரதமர் லீ கேட்டுக்கொண்டுள்ளார்,
"இந்த மாற்றங்கள், கிட்டத்தட்ட கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலைக்கு நம்மை கொண்டுசெல்லும். உட்புறங்களில் முகக்கவசம் அணிவது, உடல்நலமில்லை எனில் தனிமைப்படுத்திக்கொள்வது, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது என அனைவரும் தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்," என்று பிரதமர் லீ கூறியுள்ளார்.
ஈராண்டுகளில் முதன்முதலாக சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் (டோர்ஸ்கான்), ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு இறங்கவிருக்கிறது.
சென்ற வாரயிறுதியில் பூமலையில் தாம் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடந்த ஆண்டு தாம் சந்தித்த அதே யோகா குழுவை இம்முறையும் சந்தித்ததாக பிரதமர் லீ தமது பதிவில் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு முகக்கவசத்துடனும் இம்முறை முகக்கவசம் இல்லாமலும் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு மார்ச் 29ஆம் தேதியில் இருந்து வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
"பெருந்தொற்றுச் சூழலிலும் உடற்பயிற்சில் ஈடுபடுவதை அவர்கள் விட்டுவிடாதது என்னைக் கவர்ந்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், வெளிப்புறத்தில் முகக்கவசமின்றி காற்றைச் சுவாசிப்பதில் ஒரு தனி இன்பம்தான்," என்று பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

