வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக, வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாக தங்களைப் பதிவுசெய்துகொள்ளும்படி ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.
இப்போது 1.26 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் குறைந்தது 60-65 விழுக்காட்டினர் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதிபெற்று இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கிட்டத்தட்ட 100,000 பேர் மட்டுமே இந்தியத் தேர்தல் ஆணையத்தில் வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாகப் பதிவுசெய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குஜராத், பஞ்சாப்பைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுவாழ் வாக்காளர்களாகத் தங்கள் பெயரைப் பதிவுசெய்துள்ளனர்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் இணையத்தில் கிடைக்கும் 6A படிவத்தைப் பயன்படுத்தி, தங்களது தொகுதிகளுக்கான வாக்காளர்களாகப் பெயர்ப்பதிவு செய்துகொள்ளலாம். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலின் இறுதியில் அவர்களது பெயர்கள் சேர்க்கப்பட்டுவிடும்.
இந்நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 9-19ஆம் தேதிகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான பேராளர் குழு தென்னாப்பிரிக்கா,மொரிஷியஸ் நாடுகளுக்குச் சென்றது.
அப்போது, அவ்விரு நாடுகளின் தேர்தல் ஆணையங்களுடனும் பல சந்திப்புகளை அக்குழு நடத்தியது. அங்குள்ள வெளிநாடுவாழ் இந்தியச் சமூகங்களுடனும் அக்குழுவினர் கலந்துரையாடினர்.

