42 உக்ரேனிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா; மற்ற நாடுகளையும் தாக்கலாம் என எச்சரிக்கை

42 உக்ரேனிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா; மற்ற நாடுகளையும் தாக்கலாம் என எச்சரிக்கை

2 mins read

உக்­ரே­னில் 42 சிறு­ந­க­ரங்­க­ளை­யும் கிரா­மங்­க­ளை­யும் ரஷ்­யப் படை­யினர் கைப்­பற்­றி­விட்­ட­தாக உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­து உள்ளனர்.

உக்­ரேன்­மீது ரஷ்யா படை­ எடுத்து இருமாதங்­க­ளா­கி­விட்ட நிலை­யில், இப்­போது உக்­ரே­னின் கிழக்கு மற்­றும் தென்­ப­கு­தி­யில் கடும் சண்டை நடந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், உக்­ரே­னின் தென்­ப­கு­தி­யை­யும் கிழக்­கி­லுள்ள டோன்­பாஸ் வட்­டா­ரத்­தை­யும் முழு­மை­யா­கத் தன் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்­டு­வர ரஷ்யா இலக்கு கொண்­டுள்­ளது என்று மேஜர் ஜென­ரல் ரஸ்­டம் மின­கா­யெவ் எனும் ரஷ்ய ராணுவ உய­ர­தி­காரி தெரி­வித்­துள்­ளார்.

அப்­படி அவ்­விரு பகு­தி­களும் ரஷ்யா வச­மா­கி­விட்­டால், அதன்­பின் கருங்­க­ட­லில் அமைந்­துள்ள உக்­ரே­னி­யத் துறை­மு­கங்­க­ளை­யும் கைப்­பற்ற அது வழி­வ­குக்­கும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

'பிற நாடுகளையும் தாக்கக்கூடும்'

இந்­நி­லை­யில், உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு தொடக்­கம்­தான் என்­றும் மற்ற நாடு­க­ளை­யும் கைப்­பற்ற அந்­நாடு திட்­ட­மிட்­டுள்­ளது என்­றும் உக்­ரேன் அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி தெரி­வித்து இருக்­கி­றார்.

"எங்­க­ளைப்­போல, வாழ்­வில் வெற்­றியை நம்­பும் மற்ற அனைத்து நாடு­களும் எங்­க­ளு­டன் இணைந்து சண்­டை­யிட வேண்­டும். அந்­நா­டு­கள் எங்­க­ளுக்கு உதவ வேண்­டும். ஏனெ­னில், நாங்­கள்­தான் வரி­சை­யில் முத­லா­வ­தாக உள்­ளோம். அடுத்து எந்த நாடோ?" என்று காணொ­ளி­வழி உரை­யாற்­றி­ய­போது அதி­பர் ஸெலன்ஸ்கி சொன்­னார்.

இருநாட்டு அதிபர்களுடன் ஐநா தலைமைச் செயலாளர் சந்திப்பு

இச்சூழ­லில், போரை முடி­விற்­குக் கொண்­டு­வ­ரும் நோக்­கத்­து­டன் ஐநா தலைமைச் செய­லா­ளர் அன்­டோ­னியோ குட்­ட­ரஸ் வரும் வாரத்­தில் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்டினை­யும் உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்­கி­யை­யும் தனித்­த­னியே சந்­தித்­துப் பேச­வுள்ளார். திரு குட்­ட­ரஸ் ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் செர்கே லாவ்­ரோவை நாளை மறு­நாள் சந்­திப்­பார் என்­பதை கிரெம்­ளின் பேச்­சா­ளர் உறு­திப்­ப­டுத்­தி­னார். அதன்­பின், புட்­டின் அவ­ரைச் சந்­திப்­பார். பின்­னர் வியா­ழக்­கி­ழமை உக்­ரேன் செல்­லும் திரு குட்­ட­ரஸ், அங்கு அதி­பர் ஸெலன்ஸ்­கி­யை­யும் வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரோ குலே­பா­வை­யும் சந்­திப்பார்.