சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 5,500 பேருக்கு டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு முழுவதும் பதிவான டெங்கி சம்பவங்களைவிட அதிகம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியிருக்கிறார்.
சென்ற ஆண்டு மொத்தம் 5,258 டெங்கி சம்பவங்கள் பதிவாகின.
ஏப்ரல் 22ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 746 பேருக்கு டெங்கி காய்ச்சல் தொற்றியது.
அது கடந்த 2020 செப்டம்பர் 5ஆம் தேதியுடன் முடிந்த வாரத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள ஆகப் பெரிய உயர்வு ஆகும்.
வழக்கமாக ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் மாதம் வரை டெங்கி பரவல் அதிகமாக இருக்கும்.
"இப்போதுதான் ஏப்ரல் ஆகியது. அதனால் இது கவலை அளிக்கும் போக்காக உள்ளது. வரும் மாதங்களில் டெங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
பொதுச் சுகாதார மன்றத்தின் "சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திடுவோம்!" இயக்கத்தின் இவ்வாண்டு தொடக்கவிழாவில் அவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) அன்று பேசினார்.
சிங்கப்பூரில் டெங்கி காய்ச்சல் நிலவரம் மோசமாக உள்ளது என்றும் இவ்வாண்டு மிகப் பெரிய டெங்கி பரவல் ஏற்படலாம் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.

