கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கையாள்வதில் நம்பிக்கைதான் சிங்கப்பூருக்கு ஆக முக்கியமான அம்சமாக இருந்துள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். கொவிட்-19 மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை சிங்கப்பூர் கைவிடக்கூடாது என்றும் திரு லீ சொன்னார்.
சிங்கப்பூரின் மருத்துவத் துறை தொடர்ந்து சிறப்பாக இருப்பதை உறுதிசெய்வது, பொதுச் சுகாதாரத்தில் அதன் ஆற்றலை மேலும் மேம்படுத்துவது ஆகியவை பாடங்களில் அடங்கும்.
'ஷங்கிரி-லா' ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் 'லெக்சர் அண்ட் ஃபார்மல் டின்னர் 2022' எனும் விரிவுரை, விருந்தோம்பல் நிகழ்ச்சியில் பிரதமர் லீ உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 300 பேர் நேரடியாகக் கலந்துகொண்டனர். மேலும் சுமார் 1,000 பேர் மெய்நிகராகப் பங்கேற்றனர்.
கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிப்பது, அதிகமானோருக்குத் தடுப்பூசி போடமுடிவது ஆகியவற்றுக்கும் அரசாங்கத்தின்மீதும் மக்களிடையேயும் அதிக நம்பிக்கை இருப்பதற்கும் தொடர்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 'தி லான்செட்' மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளைச் சுட்டிக்காட்டி திரு லீ பேசினார்.
"இன்னும் சொல்லப்போனால் சுகாதாரப் பராமரிப்பின் தரம், அனைத்துலக அளவில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பெறுவதற்கான வழிகள் ஆகியவற்றையும்விட நம்பிக்கைக்குத்தான் கணிசமான அளவு கூடுதல் முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அதற்காக தரமான சுகாதாரப் பராமரிப்பு முறை இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அர்த்தம் அல்ல. அது மிகவும் முக்கியமானது," என்று திரு லீ கூறினார். பொதுச் சுகாதாரத்துக்கும் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பிலான விவகாரங்களுக்கும் சமுதாயத்தில் இருக்கும் நம்பிக்கையின் அளவு எவ்வளவு முக்கியம் என்பதை இது காண்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"மற்ற நாடுகளில் முகக்கவசம் அணிவது போன்ற பலனளிக்கும் எளிமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுகூட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. நல்ல வேளையாக சிங்கப்பூரில் அதுக்கு நேர்மாறாக இருந்தது," என்று திரு லீ சுட்டினார். இதற்கு முக்கிய காரணம், இங்குள்ள சுகாதாரப் பராமரிப்பு முறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பதுடன் தங்களின் வேலை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் சுயநலமின்றி நோயாளிகளின் நலன் கருதி நடப்பவர்கள். மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எதிர்பாரா வகையில் அமைந்தாலும் சுகாதாரப் பராமரிப்பு முறை பொதுமக்களிடம் உண்மையாகவும் ஒளிவு மறைவில்லாமலும் நடந்துகொண்டுள்ளது. இந்த மூன்று அம்சங்களை மையமாகக் கொண்டே பொதுமக்கள் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறை மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் திரு லீ விளக்கினார்.
கொவிட்-19 சூழலால் சிங்கப்பூர் வேறு வழியின்றி தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டியிருந்தது.
"நெருக்கடிக்குப் பிறகு சிந்திக்காமல் நாம் மறுபடியும் பழையபடியே செயல்படக்கூடாது. மேலும், சிரமப்பட்டு கற்றுக்கொண்ட பாடங்களைக் கைவிட்டுவிடக்கூடாது," என்று திரு லீ வலியுறுத்தினார். அந்த வகையில் சிங்கப்பூர் மருத்துவத் துறை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் முதலீடு செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று திரு லீ சொன்னார். அதோடு, பொதுச் சுகாதாரத்தின்மீது மேலும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் செய்திகள் பக்கம் 2ல்
பிரதமர் லீ: கொவிட்-19 போராட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை சிங்கப்பூர் கைவிடக்கூடாது

