5,500 டெங்கி தொற்றுச் சம்பவங்கள்

5,500 டெங்கி தொற்றுச் சம்பவங்கள்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்டு இது­வரை மட்­டுமே கிட்­டத்­தட்ட 5,500 டெங்கி தொற்­றுச் சம்­ப­வங்கள் பதிவா­கி­யுள்­ளன. இந்த எண்­ணிக்கை, சென்ற ஆண்டு முழு­வதும் பதி­வா­ன­தை­விட அதி­கம் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ தெரி­வித்­துள்­ளார்.

சென்ற ஆண்டு மொத்தம் 5,258 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நில­வரப்­படி சென்ற வாரம் 746 டெங்கி தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்கும் செப்­டம்­பர் ஐந்­தாம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 937 டெங்கி தொற்­றுச் சம்­பவங்­கள் பதி­வா­யின. அதற்­குப் பிறகு வாராந்திர எண்ணிக்கை சென்ற வாரம்­தான் ஆக அதிகமாகப் பதிவானது.

"இப்­போ­து­தான் ஏப்­ரல் மாதம் என்­ப­தைக் கருத்­தில்­கொ்­ளு­ம்­போது இது கவலை தரும் ஒன்­றாக உருவெடுத்துள்ளது. வரும் மாதங்­களில் டெங்கி தொற்­றுச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்று நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம்," என்று திரு­வாட்டி ஃபூ கூறி­னார். பொதுச் சுகா­தார மன்­றத்­தின் 'கீப் கிளீன், சிங்­கப்­பூர்' எனும் சுத்­தி­க­ரிப்பு இயக்கத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் அவர் பேசி­னார்.

சிங்கப்பூர் மோசமான டெங்கி சூழலை எதிர்நோக்குகிறது என்றும் இவ்வாண்டு பெரிய அளவில் டெங்கி பரவல் இடம்பெறக்கூடும் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

பொது­வாக ஓர் ஆண்­டின் நடுப்­ப­கு­திக்­கும் அக்­டோ­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில்­தான் அதி­க­மான டெங்கி தொற்­றுச் சம்­ப­வங்­கள் இடம்­பெ­றும். இவ்­வாண்டு அதற்கு முன்­னரே அதி­க­மான டெங்கி தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நில­வரப்­படி 180 பகு­தி­களில் தொடர்ந்து புதிய டெங்கி தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வந்துள்ளன.

கொசுப் பெருக்கத்துக்கு வகை­செய்­யும் பரு­வநிலை, முன்­ன­ர் அதி­கம் காணப்­ப­டாத 'செரோ­டைப் 3' வகை டெங்கி கிரு­மிப் பர­வல், அதி­க­மா­னோர் இன்­ன­மும் வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­தால் கூடு­தலா­னோர் கொசுக் கடிக்கு ஆளா­கும் சாத்­தி­யம் இருப்­பது ஆகியவை டெங்கி தொற்றுச் சம்பவங்கள் அதிகமாக இருப்பதற்கான மூன்று காரணங்கள் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் கூறி­யது.

டெங்­கிக்கு எதி­ரான போராட்­டத்­தில் அனை­வ­ரும் பங்­காற்­ற­வேண்­டும் என்று திரு­வாட்டி ஃபூ குறிப்­பிட்­டார். கொசுக்­கள் இனப்­பெ­ருக்­கத்­தில் ஈடு­ப­டா­மல் இருக்க வீடு­களை சுத்­த­மாக வைத்­தி­ருக்கு­மாறு அவர் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு நினை­வூட்­டி­னார்.

குறிப்­பாக தண்­ணீர் தேங்காமல் பார்த்­துக்­கொள்­வது முக்கியம்.