ஃபேரர் பார்க்கில் 1,600 வீடுகள் கட்டப்படும்

ஃபேரர் பார்க்கில் 1,600 வீடுகள் கட்டப்படும்

2 mins read
39ac9c41-4bd2-4c41-be37-4c5e51a34836
அங்கு கட்டப்படும் பிடிஓ வீடுகள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் -

ஃபேரர் பாக்கில் 10 ஹெக்டர் பரப்புள்ள இடத்தில் கிட்டத்தட்ட 1,600 புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும். விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகளுடன் அந்த வீடுகள் ஒருங்கிணைந்து இருக்கும்.

ஒரு புதிய விளையாட்டு மைய மும் அந்த வசதிகளில் உள்ளடங்கும். வீவக ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பு, நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகிய மூன்றும் இந்த விவரங்களை திங்கட்கிழமை (ஏப்ரல் 25) அறிவித்தன.

அங்கு கட்டப்படும் பிடிஓ வீடுகள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய வீடுகள், 19 காற்பந்து திடல்கள் அளவுக்கு பரப்புள்ள இடத்தில் அமைந்து இருக்கும்.

டோர்செட் ரோடு, கெங் லீ ரோடு, ஹெம்ஷயர் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு ஆகியவை அந்த இடத்தின் எல்லைகளாக இருக்கும். புதிய வீடுகள் லிட்டில் இந்தியாவிற்கும் ஃபேரர் பார்க் எம்ஆர்டி நிலையம், தேக்கா சந்தை, கேகே மாதர், சிறார் மருத்துவமனை ஆகியவற்றுக்கும் அருகாமையில் அமைந்து இருக்கும்.

புதிய கட்டுமான இடத்தில் ஏறத்தாழ 20 விழுக்காட்டு இடம் விளையாட்டு, பொழுதுபோக்கு பயனீட்டிற்காக ஒதுக்கப்படும். அந்த இடத்தின் உள்னே 1.2 ஹெக்டர் பரப்பளவுள்ள பசுமை இடத்தில் ஒரு திடலும் பூங்காவும் அமைந்து இருக்கும்.

முன்னாள் குத்துச்சண்டை பயிற்சி கட்டடம் அப்படியே வைத்துகொள்ளப்பட்டு அது பலநோக்கு சமூக விளையாட்டு இடமாக மாற்றப்படும். அது புதிதாக உருவாகும் வீட்டு மேம்பாடுகளில் ஒன்றுடன் ஒருங்கிணைந்து இருக்கும்.

உடலுறுதி முகப்புகள், மூன்று தலைமுறையினரும் கலந்துகொள்ளும் விளையாட்டுத் திடல்கள் முதலானவை இதர வசதிகளில் உள்ளடங்கும். புதிய குடியிருப்புப் பேட்டை வழியாகச் செல்லும் மெதுவோட்டப் பாதை பல்வேறு வசதிகளையும் ஒருங்கிணைப்பதாக இருக்கும்.

குழந்தை பராமரிப்பு நிலையம், கடைகள் போன்ற புதிய மேம்பாடுகளும் இடம்பெற்று இருக்கும்.

ஃபேரர் பார்க் நீச்சல் குள வளாகம் அகலும். பதிலாக அதே இடத்தில் ஒரு புதிய விளையாட்டு மையம் கட்டப்படும். புதிய மையத்தில் நீச்சல் குளங்களும் இதர விளையாட்டு வசதிகளும் இருக்கும். மேல் விவரங்கள் தயாரானதும் அறிவிக்கப்படும் என்று இந்த அமைப்புகள் தெரிவித்து உள்ளன.

ஃபேரர் பார்க் புத்துயிர் பெறுவதால் புதிய குடியிருப்பாளர்கள் வருவார்கள். பூங்கா, விளையாட்டு வசதிகளை அனுபவிக்க புதியவர்களும் வருவார்கள்.

பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் அதேவேளையில், சமூகத்தில் முன்னிலும் அதிகமானவர்களின் தேவைகளை ஃபேரர் பார்க் நிறைவேற்றும் என்று அவை கூறின.