உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் மூன்றாவது மாதமாக நீடிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க உயர்மட்ட பிரமுகர்கள் உக்ரேனுக்கு அளித்துள்ள வருகை அந்த நாட்டிற்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்து உள்ளது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா தாக்குதலை அதிகமாக்கிவரும் ஒரு நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இருவரும் உக்ரேன் தலைநகருக்கு வருகை அளித்தனர்.
உக்ரேன் போர் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது முதல் இப்போதுதான் முதன் முதலாக அமெரிக்க அமைச்சர்கள் உக்ரேனுக்கு வருகை அளித்தனர்.
அவர்கள் உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்தினர். "உக்ரேன் போரில் ரஷ்யா தோற்கிறது. உக்ரேன் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது," என்று பிறகு அமெரிக்கக் குழுவினர் தெரிவித்தனர். அந்த வருகையின் விளைவாக உக்ரேனுக்கு 165 மில்லின் டாலர் புதிய ராணுவ உதவிக்கு உத்தரவாதம் கிடைத்தது.
வரும் நாள்களில் உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதர் மீண்டும் உக்ரேன் திரும்புவார் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கியவ் நகரில் அமெரிக்கத் தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதராக திருவாட்டி பிரிட்கெட் பிரிங்கை நியமிக்க அதிபர் பைடன் திட்டமிடுகிறார்.
இந்தப் பதவி ஓராண்டுக்கும் அதிக காலம் காலியாகவே இருந்து வருகிறது.
இதனிடையே, உக்ரேனின் துறைமுக நகரான மரியபோலில் ரஷ்யப் படையினர் தரை, ஆகாய வழிகளில் கடும் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அதை உக்ரேன் படை மூர்க்கமாக எதிர்த்து வருவதாகவும் நேற்று தகவல்கள் தெரிவித்தன.
அந்த நகரில் இருக்கும் மிக முக்கியமான அசோவ்ஸ்டால் என்ற எஃகு ஆலை இன்னமும் உக்ரேனிய படையினரின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக நேற்று அங்கு உள்ள தளபதி ஒருவர் பேட்டியில் கூறினார்.
அந்த ஆலைக்குள்தான் ஆயிரக்கணக்கான படைவீரர்களும் குடிமக்களும் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள் என்று உக்ரேனிய அதிபரின் ஆலோசகரான மைகியாலோ போடோலியாக் கூறினார்.
இவ்வேளையில், மரியபோல் நகரின் சூழ்நிலை அறிந்து தான் மிகவும் கவலை அடைந்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்றுத் தெரிவித்தது.
ரஷ்யா தொடர்ந்து கடுமையான தாக்குதலை நடத்தி வருவதால், அந்த நகரில் காயமடைந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான மக்களை எட்ட முடியவில்லை என்று அது கூறியது.

