நாகேந்திரன் மரணதண்டனைக்கு எதிரான அவர் தாயாரின் கடைசிநேர மேல்முறையீடு தள்ளுபடி

நாகேந்திரன் மரணதண்டனைக்கு எதிரான அவர் தாயாரின் கடைசிநேர மேல்முறையீடு தள்ளுபடி

2 mins read
1e82dfcb-ce4e-4a46-bbe6-d1d7731b4845
இன்று திருவாட்டி பாஞ்சாலை சப்பிரமணியம் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

போதைப் பொருள் குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கத்தின் தாயார் அவரது மரண தண்டனைக்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நாகேந்திரனுக்கு நாளை புதன்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றத திட்டமிடப்பட்டுள்ளது.

திருவாட்டி பாஞ்சாலை சுப்பிரமணியம் கடந்த திங்கட்கிழமை செய்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஆன்ட்ரூ பாங், ஜூடித் பிரகா‌ஷ், பெலிண்டா ஆங் ஆகியோர் செவ்வாய் (ஏப்ரல் 26) இன்று தள்ளுபடி செய்தனர்.

இதன்வழி மரணதண்டனையை நிறுத்த மலேசியரான நாகேந்திரனுக்கு இனி சட்டபூர்வ வழிகள் ஏதும் இல்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரனை, கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தூக்கில் இட திட்டமிடப்பட்டது.

ஆனால் மேல்முறையீட்டுக்குப் பின்னர் அவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த மாதம், தலைமை நீதிபதி சுந்தரே‌ஷ் மேனன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் குழு மரண தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தனர்.

நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது தலைமை சட்ட அதிகாரியாக இருந்தவர் திரு சுந்தரே‌ஷ் மேனன்,

நாகேந்திரனின் மேல்முறையீட்டை அவரே தலைமை வகித்து விசாரித்தது அரசியல் சாசனப்படி நியாயமான வழக்குவிசாரணைக்கான அவரது உரிமைகளை மீறும் செயல் என்று தற்காப்பு வழக்கறிஞர்கள் இன்று வாதிட்டனர்.

ஆனால் அந்த வாதம் அடிப்படை அற்றது என்ற அரசாங்க வழக்கறிஞர், திரு மேனன் அந்த மேல்முறையீட்டை விசாரித்தபோது திரு நாகேந்திரனின் தரப்புக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இன்று நாகேந்திரனின் தாயார் திருவாட்டி பாஞ்சாலை, நீதிமன்றத்தில் தமிழில் பேசினார்.

தமது மகன் தமக்கு உயிடன் திரும்ப வேண்டும் என்று அவர் நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார்.

திருவாட்டி பாஞ்சாலையின் மேல்முறையீடு இன்று தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், நாகேந்திரன் அவரது குடும்பத்தாரைச் சந்திக்க இரண்டு மணிநேர அவகாசம் அளிக்கப்பட்டது.