பாலியல் குற்றம், குடும்ப வன்முறையால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரைப் பாதுகாக்க நடவடிக்கை
பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறையால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களையும் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்டவர்களையும் பாதுகாக்க காவல்துறை அதிக நடவடிக்கைகள் எடுக்கும்.
பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதில் முழுமையான, பாதிக்கப்பட்டோரை மையமாகக் கொண்ட அணுகுமுறையும் அதில் அடங்கும்.
'இதயபூர்வமான காவல் பணியும் நமது பங்காளிகளுடன் சேர்ந்து உயிர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும்' எனும் கருப்பொருளுடன் கூடிய காவல்துறை பணித்திட்டக் கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது.
குற்றங்களைத் தடுப்பதும் கண்டறிவதும் தனது குறிக்கோள் என்றபோதும், குற்றவியல் நடத்தைகளைத் தூண்டும் காரணிகள் பன்முகத்தன்மை கொண்டவை என்பதையும் சட்ட அமலாக்கத்தையும் தாண்டி தலையீடு தேவை என்பதையும் அறிந்துள்ளதாக ஓர் அறிக்கை வழியாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகத்தின் முன்னரே பதிவுசெய்யப்பட்ட உரை கருத்தரங்கின்போது ஒளிபரப்பப்பட்டது.
பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், குடும்ப வன்முறையைச் சமாளிக்கவும் காவல்துறை அதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று சொன்னார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு விசாரித்த குடும்ப வன்முறைப் புகார்களின் எண்ணிக்கை 13% கூடியது. அதாவது, 2019ல் 1,310ஆக இருந்த அப்புகார்களின் எண்ணிக்கை, 2020ல் 1,480ஆக உயர்ந்தது.
எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளோருக்கு உதவ, சமூக சேவை அமைப்புகளுடன் காவல்துறை இணைந்து பணியாற்றும் என்று திரு சண்முகம் தெரிவித்தார்.
எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளோரைப் பாதுகாக்க, பங்காளித்துவம், பயிற்சி, வளங்களை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று முக்கிய நடவடிக்கைகளை காவல்துறை தொடங்கும் என்று அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து, உயிர்மாய்ப்பு எண்ணம் கொண்டவர்களுக்குப் பராமரிப்பும் ஆதரவும் வழங்கும் நோக்கில், முன்னோடி முயற்சியாக மனநலக் கழகத்துடன் இணைந்து காவல்துறை ஒரு நெருக்கடிகால உதவிக் குழுவை அமைத்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 400 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், 2020ல் அந்த எண்ணிக்கை 13% கூடி, 452ஆகப் பதிவானது.
2012ஆம் ஆண்டில் இருந்து இதுவே ஆக அதிக எண்ணிக்கை.
நெருக்கடிகால உதவிக் குழுவிற்கு இதுநாள்வரை 2,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் அடுத்தகட்ட மதிப்பீட்டிற்காக உடனடியாக மனநலக் கழகத்திற்கு அழைக்கப்பட்டனர்.
அடுத்ததாக, பயிற்சியிலும் காவல்துறை அதிகக் கவனம் செலுத்தவுள்ளது. பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோர்க்கு அதிக ஆதரவு வழங்கும் விதமாக 202ஆம் ஆண்டில் பாலியல் குற்றம் மற்றும் குடும்ப வன்முறைத் தளபத்தியம் அமைக்கப்படும். அத்துடன், குடும்ப வன்முறையைக் கையாள்வதற்கென்றே ஒரு தனிக் குழுவும் ஏற்படுத்தப்படும்.
"குடும்ப வன்முறைக்கான அறிகுறிகளை உணரவும் பாதிக்கப்படுவோர்க்குச் சிறந்த முறையில் உதவவும் காவல்துறை அதிகாரிகள் 'குடும்ப வன்முறை உணர்திறன் பயிற்சி' பெறுவர். அத்துடன், பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடத்த காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்," என்று திரு சண்முகம் தெரிவித்தார்.
வளங்களை மறுசீரமைப்பதன்மூலம், காவல்துறையில் புகார் அளித்தபின், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் தடயவியல் மருத்துவப் பரிசோதனைகள், நேர்காணல்களின்போது ரகசியமாகவும் சௌகரியமாகவும் இருப்பதாக உணர்வர். அவர்களுக்கென தனிப் பராமரிப்பிடத்தைக் கொண்டிருக்கும் வகையில் காவல்துறை கேன்டன்மென்ட் வளாகத்தில் உள்ள 'ஒன்சேஃப்' நிலையம் மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது.

