கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாண்டு வேலையில் அமர்த்தப்பட்டனர்

கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாண்டு வேலையில் அமர்த்தப்பட்டனர்

1 mins read
618ba485-3ff6-4fc7-be3e-bc3d30addf2a
கட்டுமானத் துறையில் வொர்க் பர்மிட் எனப்படும் வேலை அனுமதிச் சீட்டுள்ள ஊழியர்கள் கூடுதலாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்கள் கூறின. கோப்புப் படம்: எஸ்பிஎச் -

சிங்கப்பூர் அதன் கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நிலையில், இங்குள்ள முதலாளிகள் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றனர்.

குறிப்பாக கட்டுமானத் துறையில் வொர்க் பர்மிட் எனப்படும் வேலை அனுமதிச் சீட்டுள்ள ஊழியர்கள் கூடுதலாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை சிங்கப்பூர்வாசி அல்லாதவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 28) அன்று இதைத் தெரிவித்தது.

சிங்கப்பூரில் வேலையில் உள்ளோர் விகிதம் கடந்த காலாண்டு உயர்ந்ததற்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாக வேலையில் சேர்க்கப்பட்டது முக்கிய காரணமாக இருந்தது.

"முன்னதாக வெளிநாட்டு ஊழியர்களை இழந்த முதலாளிகள், கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, அவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்தனர். அதனால் சிங்கப்பூர்வாசிகள் வேலையில் அமர்த்தப்பட்டதைவிட சிங்கப்பூர்வாசி அல்லாத பிறநாட்டவர்கள் அதிகமாக வேலையில் அமர்த்தப்பட்டனர்," என்று அமைச்சு கூறியது.

அத்துடன், சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தை இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் தொடர்ந்து வலுவாக மீட்சி அடைந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.

வெளிநாட்டு இல்லப் பணியாளர்களைச் சேர்க்காமல், வேலையில் உள்ளோர் எண்ணிக்கை 41,000 உயர்ந்தது.

கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வேலையில் இருந்த எண்ணிக்கை 47,000 உயர்ந்தது.