சிங்கப்பூரில் உணவு, மின்சாரம், எரிவாயு செலவு இந்த ஆண்டுக்கு அப்பாலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பொருளியல் மறுபரிசீலனை ஒன்றின் மூலம் இது தெரியவருகிறது. உலக அளவில் எரிவாயுச் செலவு அதிகரித்து இருக்கிறது.
இதன் காரணமாக எண்ணெய் தொடர்பான பொருள்களின் விலைகூடி உள்ளது என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.
மொத்தமாகப் பார்க்கையில் எரிபொருள், மின்சாரம், எரிவாயு, சமைக்கப்படாத உணவுப்பொருள்கள் ஆகியவற்றின் விலைகள் உள்ளூரில் ஏற்றம் காணும்.
இதன் விளைவாக போக்குவரத்து, உணவு சேவைகள் ஆகியவற்றுக்கான செலவும் கூடும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரேன் போர் காரணமாக உலக உணவுப்பொருள்களின் விலையில் கணிசமான அளவுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இரண்டு நாடுகளும் உணவு தானியங்களையும் சமையல் எண்ணெய்யையும் உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்பதை ஆணையம் சுட்டியது.
சுத்திகரிக்கப்படாத எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை இந்த ஆண்டில் இதுவரையில் முறையே, 33% மற்றும் 80% கூடி இருக்கிறது. கோதுமை விலை 43% அதிகரித்து இருக்கிறது.
இதனிடையே, சீனா போன்ற இதர பெரிய உணவு தானிய உற்பத்தி நாடுகளில் பருவநிலையும் சரியில்லை. இவற்றின் காரணமாக அடுத்த ஆண்டிலும் உணவு தானியங்கள் விநியோகத்தில் பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் விலங்குகளுக்கு கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் களின் விலை கூடும். இதன் விளை வாக இறைச்சி, பால் விலை உலகளவில் அதிகரிக்கும்.
உலக உணவுப்பொருள்கள் விலை அதிகரித்து இருப்பதால் அவற்றை இறக்குமதி செய்ய சிங்கப்பூருக்கு ஆகும் செலவும் கூடும். இதனால் இங்கு உணவுப்பொருள்களின் விலை அதிகரிக்கும்.
இருந்தாலும் கொஞ்ச காலத்திற்கு இந்த அதிகரிப்பு படிப்படியாக இருக்கும் என்றும் உலக நிலவரத்தைவிட இங்கு இது மிதமானதாக இருக்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மூலாதார பணவீக்கம் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகமாகக் கூடியது.
மூலாதார பணவீக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு மின்சாரம், எரிவாயு, உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே காரணம் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

