உக்ரேன் போர் காரணமாக சிங்கப்பூரின் வளர்ச்சி வாய்ப்புகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. என்றாலும் அவை தடம்புரண்டுவிடவில்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அதிகளவில் அகற்றி இருப்பதால் உள்ளூர் பொருளியல் சூடுபிடிக்கும் என்பதையும் அது சுட்டிக்காட்டி உள்ளது.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் இந்த ஆண்டின் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி 3% முதல் 5% வரைப்பட்டதாக இருக்கும் என்று தான் கணித்திருப்பதில் இப்போதைக்கு மாற்றமில்லை என்று ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
உக்ரேன் போர் காரணமாக மேற்கொண்டும் இடையூறுகள் ஏற்படாமல் இருந்தால் அல்லது கொவிட்-19 தொற்று மோசமான அளவுக்குத் தலையெடுக்காமல் இருந்தால் இந்த அளவுக்கு வளர்ச்சி சாத்தியம் என்று ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.
சிங்கப்பூர் பொருளியல் 2021ல் 7.6% வளர்ந்தது. இந்த ஆண்டின் வளர்ச்சி மிதமானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும்கூட இந்த ஆண்டு வளர்ச்சி தொடர்ந்தாற்போல் இரண்டாண்டுகளில் இடம்பெறக்கூடிய ஏறுமுக நிலவரமாகவே இருக்கும் என்று ஆணையத்தின் பொருளியல் மறுபரிசீலனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை பரந்த அளவில் பொருளியலை மறுபரிசீலனை செய்து ஆணையம் அறிக்கையை வெளியிடும்.
உக்ரேன் மீது ரஷ்யா படைஎடுத்து இருப்பதன் காரணமாக உணவு தானியங்கள், எண்ணெய், எரிவாயு, தொழில்துறை உலோகங்கள் போன்ற பொருள்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.
இவற்றின் விளைவாக உலகம் முழுவதும் விலைவாசி கூடி இருக்கிறது என்பதை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டது.
ரஷ்யா, உக்ரேன் போர் காரணமாக பொருள் சேவை விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறுகளால் இந்த ஆண்டின் எஞ்சிய பகுதிக்கான வளர்ச்சி வாய்ப்புகளில் நிச்சயமில்லாத ஒரு சூழல் நிலவுகிறது.
கொவிட்-19 தொற்று காரணமாக உலக விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் முற்றிலும் சரிசெய்யப்படுவதற்கு முன்பாகவே உக்ரேன்-ரஷ்யா பிரச்சினைகளின் பாதிப்புகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
விநியோகக் கோளாறுகள் காரணமாக ஏற்பட்டு இருக்கும் விலையேற்றம் உண்மையான வருமானத்தைப் பாதித்துவிட்டது.
அதனால் சரக்குகளுக்கும் சேவைகளுக்குமான தேவைகளுக்கு அழுத்தம் ஏற்படும். முதலீட்டுப் புழக்கமும் பாதிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் 10 ஆண்டு காலத்திற்கு இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக இந்த ஆணையம் இந்த மாதத் தொடக்கத்தில் தன்னுடைய நாணயக் கொள்கையை இறுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இருந்தாலும்கூட பொருளியல் வளர்ச்சி 3% முதல் 5% வரை இருக்கும் என்று ஆணையம் நம்புகிறது. இந்த அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கணித்து உள்ளது.
மொத்தமாகப் பார்க்கையில், சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக பங்காளி நாடுகளில் இடம்பெறக்கூடிய பொருளியல் வளர்ச்சி தடம் புரண்டுவிடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேறிய நாடுகளில் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் தேவை தொடர்ந்து வலுவாக இருந்து வரும் என்றும் ஆணையம் தெரிவித்து உள்ளது.

