பொருளியல், அரசியல் நெருக்கடி: நிலைகுத்திப்போன இலங்கை

பொருளியல், அரசியல் நெருக்கடி: நிலைகுத்திப்போன இலங்கை

2 mins read

இலங்­கை­யில் நில­வும் பொரு­ளி­யல் நெருக்­கடி, அர­சி­யல் நெருக்­கடி யாகி­விட்­டது. அந்த நாட்­டின் அதிபர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி விலக வேண்­டும் என்று கோரி நேற்று பொது வேலை நிறுத்தம் பெரிய அள­வில் நடந்­தது.

தலை­ந­க­ரில் நிறு­வ­னங்­கள் செயல்­ப­ட­வில்லை. ஆசி­ரி­யர்­கள் பள்­ளிக்­கூ­டம் செல்­ல­வில்லை. பொதுப் போக்­கு­வ­ரத்து தடைபட்டது.

இலங்கை பெரும் கட­னில் சிக்கி­விட்­டது. கையி­ருப்பு இல்லை. போது­மான அள­வுக்கு உணவு, எரி­பொ­ருள் போன்­ற­வற்றை இறக்கு­மதி செய்­ய­வும் வழி­யில்லை. அந்த நாடு கிட்­டத்­தட்ட நொடித்­து­போ­கும் நிலைக்கு வந்­து­விட்­டது.

இதற்கு அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­வும் அவ­ரு­டைய குடும்­ப­மும்­தான் கார­ணம் என்­றும் அதி­பர் உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என்­றும் மார்ச் 31ஆம் தேதி முதலே போராட்­டங்­கள் நடந்துவரு­கின்­றன.

அதி­பர் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் ஒரு­வர் மர­ணம் அடைந்து இருக்­கி­றார். இருந்­தா­லும்கூட அதிபர் பதவி விலக மறுத்து வரு­கிறார். இந்த நிலை­யில், அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக பல துறை­களை­யும் சேர்ந்த 1,000க்கும் மேற்­பட்ட தொழிற்­சங்­கங்­கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்­தத்­திற்கு அழைப்பு விடுத்­தன.

துறை­மு­கம், ரயில்வே, பெட்­ரோ­லி­யம், சுகா­தா­ரம், வங்கி, கல்வி உள்­ளிட்ட பல்­வேறு தொழில்­து­றை­களை­யும் சேர்ந்­த­வர்­கள் இலங்கை முழுவ­தும் நேற்று வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

அதி­பர் அவ­ரு­டைய சகோ­த­ர­ரான பிர­த­மர் தவிர அமைச்­ச­ரவை முழு­வ­தும் இம்­மாத தொடக்­கத்­தில் பதவி வில­கி­யது. ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைக்­க­லாம் என்று எதிர்த் ­த­ரப்­பிற்கு அதி­பர் அழைப்பு விடுத்து இருக்­கி­றார். ஆனால் அதி­ப­ரின் தலை­மை­யில் அத்­த­கைய ஓர் அரசாங்­கத்தை அமைக்க எதிர்த்­தரப்­பு­கள் விரும்­ப­வில்லை.

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்த்­த­ரப்­பி­னர் தங்­க­ளுக்குப் பெரும்­பான்மை இருக்­கிறது என்­பதை மெய்­பித்­தால் பதவி விலகத் தயார் என்று ராஜ­பக்சே சவால் விடுத்து வரு­கி­றார்.

ஆனால், எதிர்த்­த­ரப்­பி­னர் பிரிந்து கிடக்­கி­றார்­கள். அவர்­கள் எல்­லா­ரும் சேர்ந்து பெரும்­பான்­மையை நிரூ­பிக்க இய­ல­வில்லை.

பொரு­ளி­யல் நில­வ­ரம் இந்த அள­வுக்கு மோச­மா­ன­தற்கு உக்ரேன் போரும் கொவிட்-19 தொற்­றும்­தான் கார­ணம் என்று அர­சாங்க அதி­கா­ரி­கள் கூறி வரு­கி­றார்­கள்.

தாங்­கள் அனைத்­து­லக பண நிதி­யம் போன்ற அமைப்­பு­க­ளு­டன் பேசி வரு­வ­தா­க­வும் அவர்­கள் கூறி வரு­கி­றார்­கள்.

அர­சி­ய­லில் சக்தி வாய்ந்த ராஜபக்சே குடும்­பம் இலங்­கையை 30 மாதங்­க­ளி­லேயே திவா­லாக்­கி­விட்­ட­தாக எதிர்த்­த­ரப்­பி­னர் குறை­கூறி வரு­கி­றார்­கள்.