உக்ரேனியப் போரில் எவராவது தலையிட்டால் ரஷ்யாவின் தாக்குதல்கள் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் என்று அந்த நாட்டின் அதிபர் புட்டின் எச்சரித்தார். உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பெரிய அளவில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை அனுப்புவதால் உக்ரேன் பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதாக அதிபர் கூறினார். பிரிட்டனையும் அவர் கண்டித்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரிடம் பேசிய புட்டின், ரஷ்யாவை துண்டு துண்டாகச் சிதறடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புவதாகக் கூறினார். ரஷ்யாவுடன் உக்ரேனை மோதச் செய்து அந்த நாடுகள் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"உக்ரேன் பிரச்சினைகளில் வெளியார் எவராவது தலையிட விரும்பினால், அப்படி செய்து அவர்கள் ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
"பதிலடி மின்னல் வேகத்தில் இடம்பெறும் என்பதை அத்தகையோர் புரிந்துகொள்ள வேண்டும்," என்று புட்டின் தெரிவித்தார். காணொளி மூலம் அதிபர் ஆற்றிய உரையை ரஷ்ய ஊடகம் வெளியிட்டது.
"எங்களிடம் எல்லா வளங்களும் இருக்கின்றன. மிரட்டவில்லை. தேவைப்படும் பட்சத்தில் அவற்றை நாங்கள் பயன்படுத்துவோம். இதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்றாரவர்.
உக்ரேனை ரஷ்யா பிப்ரவரி 23ஆம் தேதி ஆக்கிரமிக்கத் தொடங்கியது. உக்ரேனில் பல நகர்களும் ஊர்களும் குப்பைகூளமாகிவிட்டன. 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.
உக்ரேனில் படையெடுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளும் ஆசிய நாடுகளும் பொருளியல் தடைகளை விதித்து இருக்கின்றன. மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகின்றன.
இந்நிலையில், உக்ரேனின் கிழக்குப் பகுதியில் கடும் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருவதாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.
பல்கேரியா, போலந்து நாடுகள் பணம் தரவில்லை என்பதால் அந்த நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ரஷ்யா அறிவித்தது.
இருந்தாலும் அதிபர் புட்டின் கோரியபடி ஐரோப்பாவை சேர்ந்த நான்கு எரிவாயு கொள்முதல் நிறுவனங்கள் ஏற்கெனவே ரஷ்ய நாணயத்தில் பணத்தைக் கொடுத்துவிட்டதாக 'காஸ்புரோம் பிஜேஎஸ்சி' என்ற ரஷ்யாவின் மாபெரும் எரிவாயு நிறுவனத்திற்கு அணுக்கமான ஒருவர் கூறினார்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தைத் துண்டித்துவிடுவதாக ரஷ்யா பூச்சாண்டி காட்டுகிறது என்று பிரஸ்சல்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகள் குறைகூறின. ஐரோப்பா மாற்று வழிகளைக் காண வேண்டும் என்று உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

