இந்தியாவை வாட்டிவரும் வெயிலால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறையால் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி தடைபட்டு, டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.
நிலைமையை மதிப்பீடு செய்ய அவசரக் கூட்டத்தைக் கூட்டிய டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தலைநகருக்கு மின்விநியோகம் செய்யும் அனல்மின் நிலையங்களிடம் போதிய நிலக்கரி கையிருப்பு இருப்பதை உறுதிசெய்யுமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
"இரு முக்கிய மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் தடைபட்டுள்ளதால் மெட்ரோ ரயில், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு நாள் முழுதும் மின்சாரம் வழங்க முடியாமல் போகலாம்," என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் இப்போது மின்தேவை 40% கூடியுள்ளதாக அம்மாநிலத்தின் மின்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார். மற்ற மாநிலங்களும் இதே பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஏப்ரலில் மின்தேவை அதிகரித்துள்ளது. அங்கு இம்மாத முற்பாதியில் 1.4% மின்பற்றாக்குறை நிலவியது. இவ்விகிதம் ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 3% முதல் 8.7% வரை இருந்தது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் ஒரு மணி நேரமும் கிராமப்புறங்களில் மூன்று மணி நேரமும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுகிறது.
இதனிடையே, நாட்டிலுள்ள அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைந்து கொண்டு செல்ல ஏதுவாக கடந்த சில வாரங்களாக 16 விரைவு, பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. அவ்வகையில், அடுத்த மாதம் 24ஆம் தேதிவரை மொத்தம் 670 பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலக்கரியைப் பயன்படுத்தியே 70% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

