கி. ஜனார்த்தனன்
சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கல்விக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்ட நிகழ்ச்சியில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கலந்துகொண்டு ஊக்குவித்தார்.
கேளிக்கை ஓட்டக் குழுவான 'தாறுமாறு ரன்னர்ஸ்' ஏற்பாடு செய்த ஓட்டத்தின்மூலம் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகமும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயரும் நேற்று கலந்துகொண்டு 1.85 கி.மீ. தொலைவு ஓடினர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குத் தொடங்கிய இந்த ஓட்ட நிகழ்வு, 26 மணி நேரத்திற்குப் பின் நேற்று இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பத்துப் பேர், 1.65 கி.மீ. தொலைவு என்ற கணக்கில் இந்த ஓட்டம் இடம்பெற்றது.
"ஆரோக்கியமாக மூப்படைதலுக்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழும் தாறுமாறு குழுவினருக்கு ஆதரவு தரவே இங்கு வந்துள்ளேன்," என்றார் திரு சண்முகம்.
சிங்கப்பூரர்களின் வாழ்நாள் அதிகரித்து வந்தாலும் 60 வயது முதல் பலரும் சிறுநீரகச் செயலிழப்பு, நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
"இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வது நல்ல வாழ்க்கைமுறை அல்ல," என்று திரு சண்முகம் சொன்னார்.
இந்நிகழ்வுமூலம் $30,000 திரட்ட நோக்கம் கொண்டிருந்த நிலையில், $60,000 திரட்டப்பட்டது. இத்தொகை சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.
தேவையுள்ள மாணவர்களுக்கு உபகாரச்சம்பளங்களும் கடன் உதவியும் அளித்து, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை உதவி வருகிறது.
"இதுபோன்ற முயற்சிகள் சமுதாயத்தை விரைந்து முன்னேற்றும்," என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
"அமைச்சர் சண்முகம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருவது பலருக்கும் தெரியும். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் ஆரோக்கிய வாழ்க்கைமுறை எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது," என்றார் 'தாறுமாறு ரன்னர்ஸ்' குழுவின் நிறுவனர் ரமேஷ் தர்மராஜா, 45.
இந்தியச் சமூகத்தினரிடையே மாரடைப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கும் சூழலில், இத்தகைய குழுக்கள் காலத்தின் தேவைக்குத் தக்க பதிலைத் தருவதாக திரு விக்ரம் நாயர் தமிழ் முரசிடம் சொன்னார்.
முன்னர் தனியாக ஓடியதாகவும் இப்போது சக நண்பர்களுடன் சேர்ந்து ஓட முடிவதாகவும் கூறினார் கடந்த ஒன்றரை ஆண்டாக 'தாறுமாறு ரன்னர்ஸ்' குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட நிறுவன அதிகாரி மோகன் சோமு, 56.

