முதல் வேலையில் சேர்ந்து, தங்களது வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கும்போது என்ன எதிர்பார்ப்பது என்பது குறித்தும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் எங்கு சென்று உதவிகோருவது என்பது குறித்தும் இளையர்கள் பலருக்குத் தெரியவில்லை என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) மேற்கொண்ட ஒரு கருத்தாய்வின்மூலம் தெரியவந்து உள்ளது.
இதனையடுத்து, இளையர்களை ஈடுபடுத்தவும் அவர்கள் தங்களது வேலை-வாழ்க்கைத் தேவைகள் குறித்து நன்கு அறிந்துகொள்ளவும் ஏதுவாக ஒரு பணிக்குழுவை என்டியுசி அமைக்கும் என்று அதன் தலைவர் மேரி லியூவும் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் தங்களது மே தினச் செய்தியில் தெரிவித்து உள்ளனர்.
இளம் ஊழியர்களுக்கு உதவுவது என்டியுசியின் இவ்வாண்டிற்கான முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது திரு இங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து என்டியுசி சென்ற ஆண்டு அக்கருத்தாய்வை மேற்கொண்டது. 18 முதல் 35 வயதிற்குட்பட்ட 1,039 பேர் அக்கருத்தாய்வில் பங்கேற்றனர்.
அதில், வாழ்க்கைத்தொழில் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள், நிதி, மனநலம் ஆகியவையே வேலை செய்யத் தொடங்கிய இளையர்கள் எதிர்கொண்ட முக்கிய சவால்கள் என்பது கண்டறியப்பட்டது.
வேலையில் பிரச்சினை எழும்போது என்டியுசி போன்ற அமைப்புகளிடம் உதவி கோராமல், தங்களின் நண்பர்களையும் சக ஊழியர்களையுமே அவர்கள் நாடுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
"இப்போதுள்ளதைக் காட்டிலும் இளையர்களைச் சிறந்த முறையில் செயல்படுத்த என்டியுசியால் முடியும் எனக் கருதுகிறோம்," என்றார் திரு இங்.
அவ்வகையில், 25 மற்றும் அதற்கும் குறைந்த வயதுள்ள 10,000 இளம் ஊழியர்களை புதிய பணிக்குழு சென்றடையும்.
இதன்மூலம், ஊழியரணியில் இப்போதுதான் இணைந்துள்ள இவ்வயதுப் பிரிவினரின் தேவைகள், சவால்கள், விருப்பங்கள் குறித்து உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியும் என்றும் திரு இங் கூறினார்.
திருமணமாகி, குழந்தை பெற்றுக்கொண்டபின் அவர்கள் வாழ்க்கையின் வேறு கட்டத்திற்குச் சென்றுவிடுவர் என்றும் அதன்பின் அவர்களின் கவலைகள் வேறாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் சூ தலைமையில் அமையும் பணிக்குழு, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இலக்கு கொள்ளும்.
"அனைத்து ஊழியர்களின் நலன்களுக்காகவும், அவர்களது வாழ்க்கைத்தொழிலும் எல்லாக் கட்டங்களிலும் என்டியுசி போராடி வருகிறது. பணியிடத்தில் ஊழியர்களைப் பிரதிநிதிப்பதோடு மட்டுமின்றி, நமது எதிர்கால ஊழியர்களின், அதாவது இளையர்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டும்," என்று திருவாட்டி லியூவும் திரு இங்கும் தங்களது மே தினச் செய்தியில் வலியுறுத்தி உள்ளனர்.
உலகில் சமூக, அரசியல் சூழல் எப்படியிருப்பினும், ஊழியர்களுடனான தனது பிணைப்பை என்டியுசி புதுப்பித்து, வலுப்படுத்திக்கொள்ளும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

