ஈராண்டுக்குப் பின் திரும்பிவந்த நிம்மதி
இரண்டு ஆண்டுகளில் இரண்டு நோன்புப் பெருநாள்கள், இரண்டு ஹஜ்ஜுப் பெருநாள்களை நோய்ப் பரவல் சூழலில் கட்டுப்பாடுகளுடன் அமைதியும் தனிமையும் சூழ கொண்டாடிய சிங்கப்பூர் முஸ்லிம்கள் புத்துணர்ச்சி தரும் மனநிறைவான பெருநாளை இன்று வரவேற்கின்றனர். முப்பது நாட்களும் நோன்பு நோற்று, இரவுநேர தராவிஹ் தொழுகைகளை தினசரி மேற்கொண்டு உற்றார், உறவினர், குடும்பத்தினருடன் புனித ரமலானைக் கடந்து ஈகைப் பெருநாளை விமரிசையாகக் கொண்டாடுவதில் அளவில்லா குதூகலத்தில் திளைத்துள்ளனர் முஸ்லிம்கள்.
சிங்கப்பூரே முடங்கிய அதிரடி நடவடிக்கை காலத்தில் பள்ளி
வாசல்கள் மூடப்பட்டு, வீட்டிலேயே தொழுது, பெருநாளை 2020ஆம் ஆண்டு வரவேற்ற நினைவலைகள் மனதில் பதிந்த நிலையில், பின்னர் 50, 100, 250 பேர் என குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவுசெய்து பள்ளிவாசல்களில் தொழுத நாள்
களையும் நினைத்துப்பார்த்து, இன்று இடைவெளி இன்றி, தோளுக்குத் தோள் வரிசைகளை நேராகவும் நெருக்கமாகவும் சகோதரத்துவத்துடன் நின்று தொழுகையை மேற்கொண்டதில் கண்கலங்கிய மனநிறைவை மக்கள் பெற்றனர்.
"கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து மெய்சிலிர்க்கிறது. முப்பது நாள் தராவிஹ் தொழுகை, ரமலான் 17ஆம் பிறையில் பத்ரு ஸஹாபாக்கள் இரவு, 27ஆம் பிறையில் லைலத்துல் கத்ரு, கடைசி பத்து பிறைகளில் கியாமுல் லைல் சிறப்பு தொழுகை என அனைத்தையும் சீரும் சிறப்புமாக நடத்தி மக்களுக்கு முழுமையாக வசதி செய்து கொடுத்து சேவையாற்றியதில் நிறைவாக உள்ளது," என்று கூறினார் லிட்டில் இந்தியாவின் டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் திரு முஹம்மது இத்ரீஸ்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பள்ளிவாசலில் தமிழ் முஸ்லிம்கள் பயான் எனும் சிறப்புரையைத் தாய்மொழியாம் தமிழ்மொழியில் கேட்டு பயன்பெற சிங்கப்பூரின் அனைத்து இடங்களிலிருந்தும் திரளாக வருவது வழக்கம்.
தேசிய நினைவுச் சின்னமான இந்தப் பள்ளிவாசல் தொழுகைக்காக வருபவர்கள் தங்கள் உற
வினர்களையும் நண்பர்களையும் சந்தித்து ஆரத்தழுவும் உறவுகளின் பாலமாகவும் விளங்குகிறது.
"புனித நோன்புப் பெருநாளில் மக்கள் பலரையும் சந்தித்து பெரியவர்களிடம் வாழ்த்தும் துஆவும் பெறுவது மாபெரும் வரமாகக் கருது கிறேன். எவரையும் சந்திக்காமல் தனித்து கொண்டாடும் நிலையின்றி வீட்டிற்குப் பலரையும் அழைத்து இன்று பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். வீட்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மிகுந்த மனநிம்மதியைத் தந்துள்ளது," என்றார் 34 வயது வணிகர் முஹம்மது ரிஸ்வான்.
புத்தாடைகள் அணிந்து, பல வகையான உணவருந்தி பெருநாளை கிட்டத்தட்ட 20 பேருடன் கொண்டாடவிருக்கிறார் 25 வயது ஃபர்ஹானா ஃபர்வின்.
"இனிப்புப் பலகாரங்களைக் கடந்த நான்கு நாள்களாக அம்மாவுடன் சேர்ந்து செய்துள்ளேன். வீட்டைச் சுத்தம் செய்து புதிய விரிப்புகளை கூடத்தில் போட்டு, அலங்கார விளக்குகளைப் பொருத்தி வருகையாளர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்," என்று குதூகலத்துடன் பகிர்ந்தார் அவர்.
எல்லா முஸ்லிம் மக்களுக்கும் பிரதமர் லீ சியன் லூங் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் முரசும் எல்லா முஸ்லிம்களுக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

