உக்ரேன்மீது போர் தொடுத்ததை அடுத்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய கட்டம் கட்டமாக தடை விதிப்பதற்கான திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நிர்வாகி முன்மொழிந்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் அத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால், அது முக்கியத் திருப்புமுனையாக அமையும் எனச் சொல்லப்படுகிறது.
ஏனெனில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய்க்கும் எரிவாயுக்கும் ரஷ்யாவைச் சார்ந்து இருப்பதால், அவர்கள் மாற்று விநியோகங்களைக் கண்டறிந்தாக வேண்டும்.
"ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதிக்கும் திட்டத்தை இன்று முன்மொழியவுள்ளோம்," என்று ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் நேற்று தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியையும் இவ்வாண்டு இறுதிக்குள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பொருள்கள் இறக்குமதியையும் முழுமையாக நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக திருவாட்டி வான் டெர் லெயன் குறிப்பிட்டார்.
அதனால் ஐரோப்பியப் பொருளியல்களில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் அவர் உறுதிபூண்டார்.
"ரஷ்ய கச்சா எண்ணெய்யைச் சார்ந்து இருக்கும் நிலைமைக்குத் தீர்வுகாண விரும்புகிறோம். சில நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்யைப் பெரிதும் சார்ந்து இருப்பதால் அது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிந்துள்ளோம். ஆனால், அதைச் செய்தே ஆக வேண்டும்," என்றார் திருவாட்டி வான் டெர் லெயன்.
தனது மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பிற்கு ரஷ்ய அதிபர் புட்டின் பெரும் விலை கொடுத்தே ஆக வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, ரஷ்யாவின் முக்கிய வங்கியான ஸ்பெர்பேங்க் உட்பட மேலும் நான்கு வங்கிகள்மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 'ஸ்விஃப்ட்' தகவல் பரிமாற்ற அமைப்பில் இருந்து ஏற்கெனவே பல ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், சொத்துகள் முடக்கம், பயணத் தடைகள் என ரஷ்ய ராணுவ உயரதிகாரிகள்மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதிக்கும் என்றும் அதிலிருந்து அவர்கள் தப்ப முடியாது என்றும் திருவாட்டி வான் டெர் லெயன் கூறி இருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவுகளுக்கு அதன் 27 நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளது.
நடப்பு உடன்பாடுகளின்படி, ஹங்கேரியும் ஸ்லோவாக்கியாவும் 2023ஆம் ஆண்டு இறுதிவரை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவுகளை உறுப்பு நாடுகள் நிராகரிப்பதைத் தவிர்க்க, ஹங்கேரிக்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் கூடுதல் கால அவகாசம் வழங்கலாம் என்று பெல்ஜியம் யோசனை தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பது ஓர் அபாயகரமான நடவடிக்கை என்று 'புரூகெல்' ஆய்வுக்குழுவின் சிமோன் டக்லியபீட்ரா குறிப்பிட்டுள்ளார்.
"குறுகிய கால அடிப்படையில் பார்த்தால், இதனால் ரஷ்யாவிற்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்படலாம். அதே நேரத்தில், அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் ஐரோப்பிய மற்றும் உலகப் பொருளியலிலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் சொன்னார்.

