இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் காதல் விரக்தியில் ஓர் ஆடவர் மூன்று மாடி குடியிருப்பைக் கொளுத்திவிட்டார். அந்தக் கட்டடத்தில் இருந்த வீடுகள் நாசமானதில் ஏழு பேர் மாண்டுவிட்டனர்.
ஒன்பது பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று காவல்துறை தெரிவித்தது. இதன் தொடர்பில் சஞ்சய் தீக்ஷித், 27, என்பவர் கைதானார்.
அவர் காவல்துறையிடம் இருந்து தப்பி ஓடியபோது இந்தூர் நகரின் லோகமண்டி என்ற பகுதியில் தரையில் வழுக்கி விழுந்து காய மடைந்துவிட்டதாகவும் அவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்தூர் நகர காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சந்தேகப்பேர்வழி மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாகவும் அது கூறியது. இந்தூர் நகரில் விஜய் நகர் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் ஒரு வீட்டில் குடியிருந்த பெண்ணை அந்த ஆடவர் காதலித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி என்ற நகரைச் சேர்ந்த தீக்ஷித்தை அந்தப் பெண் நிராகரித்துவிட்டார்.
அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் ரூ.10,000 தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து அந்தப் பெண்ணுக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது.
இதை அறிந்த தீக்ஷித் கடும் கோபமடைந்து அந்தக் கட்டடத்தின் கீழ் பகுதியில் மின்இணைப்புப் பெட்டிக்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த அந்தப் பெண்ணின் மோட்டார்சைக்கிளைக் கொளுத்திவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அங்கிருந்த பல வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து கடைசியில் முழுக் கட்டடமே நாசமாகிவிட்டதாகவும் பல வீடுகளில் குடி இருந்தவர்கள் வெளியேற முடியாமல் போனதால் ஏழு பேர் கருகி மாண்டுவிட்டதாகவும் இதர ஒன்பது பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
குற்றவாளியைப் பிரத்தியேகப் படச்சாதனம் மூலம் காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
அதே கட்டடத்தில் ஒரு வீட்டில் ஆறு மாத காலம் தீக்ஷித் குடியிருந்து பிறகு வெளியாகிவிட்டார். காவல்துறையிடம் இருந்து தப்பியபோது காயமடைந்த சஞ்சய் சிகிச்சை பெற்று வருகிறார்.