திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தங்களுடைய மகன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் திரு சஞ்சீவ் மற்றும் திருவாட்டி சாதனா பிரசாத், அந்த மகன் மீதும் மருமகள் மீதும் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.
மகன் வெளிநாடு சென்று படிக்கவும் அமெரிக்காவில் விமானி ஆவதற்குப் பயிற்சி எடுக்கவும் நிறையப் பணம் செலவு செய்ததாகவும் இப்போது பொருளாதார நெருக்கடியில் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அந்த மூத்த தம்பதி கூறியுள்ளனர்.
அத்துடன் வங்கிக் கடன் பெற்று வீடு ஒன்றும் கட்டியுள்ளனர். ஐந்து நட்சத்திர ஹோட்டல், சொகுசு கார், வெளிநாட்டில் மகன் மருமகளின் தேனிலவு என மகனின் ஆடம்பரத் திருமணத்திற்கான செலவுகளையும் அவர்கள் ஏற்றிருந்தனர்.
இதனால், சேமிப்பே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அந்தத் தம்பதியர்.
திருமணமான மகன், குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றியோ பெற்றோரைப் பற்றியோ கவலைப்படவில்லை.
"ஒரு பேரப்பிள்ளை இருந்தால் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும்," என்று கூறுகின்றனர்.
எனவே, இன்னும் ஒரு வருடத்தில் பேரக்குழந்தை பெற்றுத் தராவிட்டால், மகன் 2.5 கோடி, மருமகள் 2.5 கோடியாக மொத்தம் ரூ.5 கோடி (S$900,000) இழப்பீடு தரவேண்டும் என்று அந்தத் தம்பதி தங்களின் மனுவில் கோரியுள்ளனர்.

