8,000 டெங்கி தொற்றுச் சம்பவங்கள்

8,000 டெங்கி தொற்றுச் சம்பவங்கள்

2 mins read
868c4aa4-6dbd-4b66-a94c-1b8001109117
உட்ஸ்வேல் கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் (வலமிருந்து இரண்டாவது நபர்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இவ்வாண்டு இதுவரை மட்டுமே 8,000க்கும் அதிகமான டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு முழுவதும் பதிவான 5,258ஐவிட கணிசமான அளவு அதிகம்.

ஆண்டுதோறும் பொதுவாக ஜூன், அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் சிங்கப்பூரில் அதிகமான டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகும்.

அதற்கு முன்னரே தொற்று எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருப்பது கவலை தரும் ஒன்று என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் கூறியுள்ளார். உட்ஸ்வேல் கூட்டுரிமை வீட்டு வளாகத்திற்குச் சென்றபோது அவர் இவ்வாறு கூறினார்.

உட்லண்ட்ஸ் டிரைவ் 72ல் இருக்கும் இப்பகுதி, அதிகமான டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பகுதிகளில் ஒன்று.

கடந்த மார்ச் மாதம் இங்கு முதல் டெங்கி தொற்றுச் சம்பவம் பதிவானது. தற்போது தொற்று எணணிக்கை 96க்குக் கூடியுள்ளது.

"வாரந்தோறும் தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது, தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டம்," என்று உள்துறை துணை அமைச்சருமான திரு டான் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) நிலவரப்படி சென்ற வாரம் 1,055 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

மேலும், இதுவரை 280 டெங்கி தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்ற மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 196ஆக இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் முதல் சென்ற மாதம் வரை தேசிய சுற்றுப்புற அமைப்பு தீவு முழுவதும் 243,000 சோதனைகளை நடத்தியது. கட்டுமானத் தளங்களில் நடத்தப்பட்ட சுமார் 1,900 சோதனைகளும் அவற்றில் அடங்கும்.

கொசுக்கள் இனப் பெருக்கத்தில் ஈடுபடும் கிட்டத்தட்ட 7,100 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. ஏடீஸ் கொசுக்கள் இனப் பெருக்கத்தில் ஈடுபடும் இடங்களில் 60 விழுக்காட்டு இடங்கள் வீடுகளில் இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உட்ஸ்வேல் கூட்டுரிமை வீடுகள் இருக்கும் பகுதியில் சமூகப் பங்காளிகளும் அடித்தளத் தலைவர்களும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரு டான் தெரிவித்தார்.

குறிப்பாக குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது, குடியிருப்பு, கட்டுமானப் பகுதிகளில் கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதைக் குறைப்பது ஆகியவற்றின் தொடர்பில் அவர்கள் முயற்சிகளை எடுத்து வருவதாக திரு டான் சொன்னார்.

விழிப்புணர்வை வளர்க்க அந்த வட்டாரத்தில் மின்னிலக்கக் குறிப்புகள் போன்றவை எழுப்பப்பட்டுள்ளன.

இருட்டாக இருக்கும் மூலைகளில் பூச்சி மருந்தைப் பூசுமாறும் அடிக்கடி பூச்சி வருவதைத் தடுக்கும் மருந்தைப் பயன்படுத்துமாறும் டெங்கி தொற்றுக் குழுமங்களில் வசிப்போர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.