நவம்பரில் உருவான விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட ஆசியான்-அமெரிக்க உச்சநிலை மாநாட்டில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்ற ஒப்பந்தம் கடந்த ஆண்டு சீனாவுடனும் ஆஸ்திரேலியாவுடனும் ஏற்படுத்தப்பட்டது.
மேம்படுத்தப்பட உள்ள பங்காளித்துவம் அர்த்தமுள்ளதாகவும் தனித்தன்மை கொண்டதாகவும் இருதரப்பு நன்மைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்று ஆசியானும் அமெரிக்காவும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
ஆசியானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 45 ஆண்டு கால உறவைக் குறிக்கும் வகையில் வாஷிங்டன் நகரில் நடத்தப்பட்ட இரு நாள் மாநாட்டின் முடிவில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளிக்கிழமை மாநாட்டின் பிற்பகல் நிகழ்வில் உரையாற்றினார்.
அப்போது அவர், "ஆசியான்-அமெரிக்கா இடையிலான 45 ஆண்டு பங்காளித்துவம் மற்றும் தோழமையை மட்டும் நாம் கொண்டாடவில்லை; ஆசியான் -அமெரிக்கா உறவில் புதிய அத்தி யாயத்தைத் தொடங்கியுள்ளோம்," என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், உச்சநிலை மாநாடும் ஆசியான்-அமெரிக்க உறவு மேம்பாடும் ஆசியான் பங்காளித்துவத்தின் மீது அமெரிக்கா நன்மதிப்பு கொண்டுள்ளதையே காட்டுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
ஆசியான்-அமெரிக்கா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க வாஷிங்டன் சென்றிருந்த திரு லீ மாநாட்டின் முடிவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"ரஷ்யப் படையெடுப்பு, உக்ரேனில் போர், கொவிட்-19 தொற்றுக்குப் பிந்திய நிலை, தொற்றிலிருந்து விடுபடுவது ஆகிய உலகளாவிய விவகாரங்களுக்கு இடையில் வட்டார அளவிலான விவகாரங்களும் நிகழ்ந்து வருகின்றன.
"அமெரிக்க-சீன உறவுகள் சிக்கலாகவும் கடினமாகவும் உள்ளன.
"இத்தனை நிகழ்வுகளுக்கு இடையிலும் ஆசியான் தலைவர்களை வாஷிங்டன் வரவழைத்து, ஆசியானுடனான உறவை வளர்ப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்து கிறது.
"ஆசியான் பங்காளித்துவத்தின்மீது அமெரிக்கா நன்மதிப்பு கொண்டுள்ளதையே இது காட்டுவதாக நான் கருதுகிறேன்.
"நம்முடன் இணைந்து அதிகம் பணியாற்ற அமெரிக்கா விரும்புகிறது.
"சிங்கப்பூர் நீண்டகாலப்போக்கின்மீது கவனம் செலுத்துவதால் இது இந்த வட்டாரத்திற்கும் நமக்கும் நன்மை பயக்கும். அமெரிக்காவின் பங்கு நமது வட்டாரத்திற்கு இன்றியமையாதது. இதனை யாராலும் ஈடுசெய்ய இயலாது," என்றார் திரு லீ.
இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பு, இந்த வட்டாரத்திற்கான அமெரிக்காவின் அடுத்தகட்ட பொருளியல் உத்தியாக இருக்கும் என்றும் அதுகுறித்து வாஷிங்டன் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டமைப்பில் இடம்பெற பல ஆசியான் நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. தொடங்கப்பட்டதும் இந்தக் கட்டமைப்பில் சில ஆசியான் நாடுகள் இடம்பெறக்கூடும் என்றார் பிரதமர் லீ. இந்தப் பொருளியல் திட்டத்தை சிங்கப்பூர் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா தலையிடுவது பாதுகாப்புக்கும் தற்காப்புக்கும் நன்மை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.
"பொருளியல் ஒத்துழைப்பும் அதனால் ஏற்படும். சுற்றுச்சூழல் விவகாரங்கள் போன்ற அம்சங்களும் இடம்பெறக்கூடும்," என்று திரு லீ கூறினார்.

