ஃபின்லாந்து நேட்டோ கூட்டணியில் இணைவதற்காக விண்ணப்பிக்கும் என்று நேற்று அந்நாட்டு அதிபர் சாவ்லி நீனிஸ்டோ தெரிவித்தார். இதற்கிடையே நேட்டோவில் இணைவது தொடர்பில் சுவீடனின் ஆளுங்கட்சியும் முடிவெடுப்பதற்காகக் கூடியது.
இதனால் வரும் நாள்களில் இரு நாடுகளின் கூட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் சாத்தியம் உண்டு என்று கூறப்படுகிறது.
ஃபின்லாந்தின் அதிபர் மற்றும் அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் இருவரும் நேட்டோ உறுப்பினர் ஆவதற்கான முன்மொழிவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகவுள்ள நிலையில், அண்டைநாடுகளான ஃபின்லாந்தும் சுவீடனும் தாங்கள் பின்பற்றி வந்த ராணுவ நடுநிலைக் கொள்கைகளை மீட்டுக்கொள்வதாகத் தெரிகிறது.
"எங்களின் விண்ணப்பங்களை வரும் வாரத்தில் சுவீடனுடன் சமர்ப்பிக்கும் தருணத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்," என்று ஃபின்லாந்தின் பிரதமர் மரின் நேற்று முன்தினம் கூறினார்.
பனிப்போர் முடிவடைந்ததை அடுத்து நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து தாங்கள் பின்பற்றி வந்த கடுமையான நடுநிலையை மீட்டுக்கொண்டன. அத்துடன் 1990களில் நேட்டோவுடன் பங்காளித்துவ உறவை அமைத்துக்கொண்டு மேலை நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்திக்கொண்டன.
ஃபின்லாந்து அதன் முடிவில் தீவிரமாக உள்ள நிலையில் சுவீடன் பதற்றநிலையில் உள்ளது. பால்டிக் கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் நேட்டோவில் இன்னமும் இணையாத ஒரே நாடாக அது உள்ளதே இந்தப் பதற்றத்திற்குக் காரணமாகும்.
இதற்கிடையே, ஃபின்லாந்து சேர்வதைப் பொறுத்து தங்களின் ஆதரவு உள்ளது என்ற நிபந்தனையைப் பல சுவீடன் நாட்டு அரசியல்வாதிகள் முன்வைத்துள்ளனர்.
"இனியும் காலங்கடத்தாமல் நேட்டோவில் உறுப்பு நாடாக ஆவதற்கு ஃபின்லாந்து விண்ணப்பித்தாக வேண்டும்," என்று கடந்த வியாழக்கிழமையன்று நீனிஸ்டோவும் மரினும் பகிரங்கமாகக் கூறியிருந்தனர்.
அதையடுத்து, நீனிஸ்டோ ரஷ்ய அதிபர் புட்டினுடன் தொலைபேசிவழி தொடர்புகொண்டு நேட்டோவில் தாங்கள் சேர்வதற்கு விருப்பம் கொண்டிருப்பதைப் பற்றி தெரிவித்தார். அந்த உரையாடல் 'ஒளிவுமறைவின்றி' இருந்ததாகவும் கூறப்பட்டது.
"இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் எங்களின் உரையாடல் இருக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்தப்பட்டது," என்று அதிபர் நீனிஸ்டோ கூறியதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இருப்பினும், இது தவறான ஒரு முடிவு என்று புட்டின் பதில் அளித்திருந்தார்.
ஃபின்லாந்தின் பாதுகாப்புக்கு எந்த ஒரு மிரட்டலும் இல்லாததால் நேட்டோவில் இணைய நினைப்பது தவறான முடிவாகும் என்று அவர் கூறியதாக அறியப்படுகிறது.
நேட்டோவில் உறுப்பு நாடாக இணைவதற்கு அந்தக் கூட்டணியில் உள்ள 30 உறுப்பினர்களும் தங்களின் ஒப்புதலை அளிக்க வேண்டும்.

