சிங்கப்பூரின் நீச்சல் சாதனை மன்னன் ஜோசஃப் ஸ்கூலிங் நேற்று மீண்டும் தனது வெற்றி முத்திரையை உறுதிப்படுத்தினார்.
அந்த 26 வயது நீச்சல் வீரர், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆடவருக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தங்கத்தை வென்றார்.
வியட்னாமில் ஹனோய் நகரில் இருக்கும் மை டின் நீர் விளையாட்டு வளாகத்தில் அவர் தன்னுடன் போட்டியிட்ட அனைவரையும் வீழ்த்தி 52.22 நொடிகளில் நீந்தி வெற்றிபெற்று தங்கத்தைத் தனதாக்கிக்கொண்டார்.
அவருடன் போட்டியிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்த சிங்கப்பூரரான குவா ஸெங் வென் 52.86 விநாடிகளில் 100 மீட்டர் தொலைவை நீந்தி முடித்தார்.
தாய்லாந்தைச் சேர்ந்த நவாபத் வோங்சரோன் 52.98 நொடிகளில் நீந்தி மூன்றாவது இடத்திற்கு வந்தார். ஜோசஃப் ஸ்கூலிங் சென்ற ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தன்னுடைய வெற்றி பதக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள தவறிவிட்டார்.
அதற்குப் பிறகு அனைத்துலக போட்டி ஒன்றில் ஸ்கூலிங்கின் முதலாவது 100 மீட்டர் வெற்றி தங்கம் இதுவாகவே அமைந்தது.
நேற்றுக் காலையில் நடந்த தகுதிச் சுற்று போட்டியில் ஸ்கூலிங் 54.38 நொடிகளில் இரண்டாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.
முன்னதாக தென்கிழக்கு ஆசிய போட்டியில் சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை கான் சிங் ஹ்வீ, பெண்களுக்கான 200 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தங்கம் வென்றார். இவர் 2 நிமிடம் 02.06 நொடிகள் நீந்தினார். அடுத்த இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த கமோன்சானோக் குவான்முவாங் (2:02.63) பிடித்தார்.
ஆடவருக்கான 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் சிங்கப்பூரரான கிளன் லிம் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
பக்கம் 6ல் மேலும் செய்தி

