வடகொரியாவில் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் கிளம்பி இருக்கிறது.
இதுவரை 50 பேர் மாண்டுவிட்டனர். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு கொவிட் தொற்று இருந்தது என்று தெரியவில்லை.
வடகொரியாவின் அரசாங்க ஊடகம் இந்தத் தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.
இவ்வேளையில், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், நாட்டின் சுகாதார அதிகாரிகளைக் கடுமையாகச் சாடினார். அதோடு பொது மக்களுக்கு மருந்தை விநியோகிக்கும்படி அவர் ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
வடகொரியாவில் கிருமித்தொற்று பரிசோதனை வசதிகள் அவ்வளவாக இல்லை. ஆகையால் ஒரு சிலருக்கு மட்டுமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போதிய அளவுக்குத் தடுப்பூசி மருந்தும் இல்லை. சுகாதாரப் பராமரிப்பு வளங்களும் சரியில்லை.
ஆகையால், கொரோனா தொற்றுக்கு அந்த நாடு எளிதில் ஆளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
வடகொரியாவில் நாடளாவிய முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் திரு கிம் சென்ற வார முடிவில் உச்ச ஆட்சிக் குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். அவர், தேசிய மருந்து வளங்களில் இருந்து பொதுமக்களுக்கு மருந்துகள் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று அதிகாரிகளைக் குறைகூறினார்.
மிகவும் பலம் வாய்ந்த ராணுவத்தின் மருத்துவப் பிரிவுக்கு உடனடியாக அவர் உத்தரவு பிறப்பித்தார்.
பியோங்யாங் நகரில் பொதுமக்களுக்கு மருந்துகளை விநியோகித்து நிலைமையை உடனடியாகச் சீர்செய்யும்படி ராணுவத்துக்குத் திரு கிம் உத்தரவிட்டார் என்று அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
வடகொரியா தன் நாட்டில் கொரோனா கிருமி தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முதன்முதலாக சென்ற வாரம் தெரிவித்தது. இருந்தாலும் அந்த நாட்டில் கொஞ்ச காலமாகவே தொற்று இருந்து வந்திருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
அதிபர் கிம் அதிகபட்ச அவசரகால கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி இருக்கிறார்.
பொருளியல் முடக்கமும் வேலையிடங்களில் கூடுவோர் எண்ணிக்கையைக் குறைப்பதும் அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
வடகொரியாவுக்கு ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மருந்தையும் சீன தயாரிப்பு தடுப்பூசி மருந்துகளையும் கொடுக்க 2021ல் அனைத்துலக சமூகம் முன்வந்தது.
ஆனால் தன் எல்லைகளை மூடி அதன்மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டதாக 2020 தொடக்கத்தில் வடகொரியா தெரிவித்தது. தென்கொரியா, சீனாவுடன் வடகொரியா எல்லைகளைக் கொண்டிருக்கிறது.
சீனாவில் ஓமிக்ரான் தொற்று இப்போது அதிகரித்து இருக்கிறது. வடகொரியா கேட்டுக்கொண்டால் எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என்று தென்கொரியா தெரிவித்து இருக்கிறது.
இதனிடையே, நாட்டில் கொவிட்-19 பரவுவதை மாபெரும் பேரிடர் என்று அதிபர் கிம் சனிக்கிழமை குறிப்பிட்டார்.
வடகொரியா உருவானது முதல் இந்த அளவுக்குப் படுமோசமான ஒரு பேரிடர் இடம்பெற்றதில்லை என்று அதிபர் கூறியதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தொற்று காரணமாக வடகொரியாவில் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

