சிங்கப்பூர் விமானத் துறையில் எதிர்பாராத அதிவேக வளர்ச்சி
சிங்கப்பூர் விமானத் துறை, கொவிட்-19 தொற்றுக்குப் பிந்திய காலக்கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிவேகத்தில் மீண்டு வருவதால் அதன் ஆற்றலை பெருக்கும் வகையில் சாங்கி விமான நிலையத்தின் 5வது முனையம் தயார்படுத்தப் படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த முனையத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் பேசிய ேபாக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், மாபெரும் முனையத்திற்கான திட்டங்களைத் தொடர அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உத்தேச விமானத் துறையின் வளர்ச்சி உத்வேகம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறை யின் வளர்ச்சி இரண்டு மடங்காக அதி கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப ஐந்தாவது முனையம் 2030களின் மத்தியில் தயாராகிவிடும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
கடந்த 2020 மே மாதத்தில் 5வது முனையத்தின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
கொவிட்-19 சவாலை முதலில் சமாளித்தாக வேண்டும். அதன் பிறகு விமானப் பயணத்திற்கான தேவையை நன்கு புரிந்துகொண்டு கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று அரசாங்கம் அப்போது கூறியிருந்தது.
இந்த இைடப்பட்ட காலத்தில் 5வது முனையத்தின் வடிவமைப்பு காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டதாக சாங்கி விமானத் துறை உச்சநிலை மாநாட்டில் பேசிய அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
வடிவமைப்பு தொடர்ந்து சீர் படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் நேற்று தொடங்கிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறும்.
இதில் பங்கேற்கும் விமானத் துறையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தலைவர்கள் அத்துறையின் எதிர்கால வளர்ச்சி பற்றி ஆலோசிக்கவிருக்கின்றனர்.
அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கத்தின் தலைமைச் செயலாளர் வில் வால்ஷ், அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து நிறுவன மன்றத் தலைவர் சால்வடோர் சயிக்கியாடானோ ஆகியோர் இந்த மாநாட் டில் பங்கேற்கும் முக்கிய பிர முகர்கள் சிலர்.
கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19க்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது இவ்வட்டார விமானப் பயணங்களுக்கான தேவை 17 விழுக்காடு மட்டுமே கூடியது. ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட முக்கிய சந்தைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன.
இருந்தாலும் இவ்வாண்டின் முதல் காலாண்டில் விமானப் போக்குவரத்து ஊக்கமூட்டும் வகையில் அதிகரித்துள்ளது.
அனைத்துலக விமானப் போக்குவரத்து மீட்சியடைந்து 2023ல் கொவிட்-19க்கு முந்தைய நிலையை எட்டும் என்று திரு வால்ஷ் கணித்துள்ளார். இது, முன்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட ஓராண்டு முன்னதாகும்.
கடந்த மாதம் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை கொவிட்-19க்கு முந்தைய நிலையில் 40 விழுக் காட்டை தாண்டியது. இவ்வாண்டு இறுதிக்குள் அது 50 விழுக் காட்டைத் தொட வேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்கா கும்.
"அடுத்து வரும் மாதங்களில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் விமானப் போக்குவரவு மேலும் வேகமெடுக்கும். இதர விமான நிலையங்களுக்கும் இந்த வளர்ச்சி விரிவடையும்," என்று அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

