இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளன், 31 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தன்னுடைய 142வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனை, 51, விடுதலை செய்தது. ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புத்தூரில் கொலை செய்யப்பட்டார்.
அதன் தொடர்பில் 1991ல் பேரறிவாளன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 26 பேருக்கு 1998 ஜனவரி 28ஆம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதிபடுத்தப்பட்டது.பிறகு 2000ஆம் ஆண்டில் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து இடம்பெற்ற சட்ட, அரசியல் பிரச்சினைகளை அடுத்து 2014ல் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது.
நெடுங்காலமாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய ஏழு பேரையும் விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே இருப்பதாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஒரு குழு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், அவர்களை விடுவிக்க முடிவு செய்த தமிழக அரசு அதை அனுமதிக்கும்படி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது.
ஆனால் அந்த முடிவை மாநில ஆளுநரே செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க, தமிழக அரசு ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.
ஆனால், ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காததால் உச்ச நீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறி வாளனை விடுவித்துவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி என்றார்.
பேரறிவாளனின் தந்தையான குயில்தாசன், தன் புதல்வர் விடுவிக்கப்பட்டு இருப்பதை அறிந்து தான் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
பேரறிவாளன் விடுதலைக்காக அரும்பாடுபட்டு வந்த அவரின் தாயார் அற்புதம்மாள், தன் மகனின் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியதாகவும் விடுதலைக்குக் குரல்கொடுத்த அனைவருக்கும் தான் நன்றி கூறுவதாகவும் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
அதேபோல அவரின் ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பேரறிவாளன் விடுதலையாகி இருப்பதை அடுத்து இதர ஆறு பேரும் விரைவில் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

