சிங்கப்பூரைச் சேர்ந்த மின் வர்த்தகத் தளமான ஸிலிங்கோ (Zilingo) அதன் தலைமை நிர்வாகியான அங்கிதி போஸை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
திருவாட்டி போஸ் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவார்.
திருவாட்டி போஸ் நிதி முறைகேடு செய்தார் என்ற புகார்கள் குறித்து ஸிலிங்கோ விசாரித்து வந்தது.
மார்ச் 31ஆம் தேதி திருவாட்டி போஸ் தனது பதவியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார்.
ஸிலிங்கோ வெள்ளிக்கிழமை (மே 20) அன்று விடுத்த அறிக்கையில் காரணத்துடன் திருவாட்டி போஸை நீக்க முடிவு செய்ததாகக் கூறியது.
தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அது கூறியது.
ஆடை வர்த்தகர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஸிலிங்கோ தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
சிங்கப்பூரின் தெமாசெக் நிறுவனம், சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் முதலீட்டு அமைப்பான ஈடிபிஐ (EDBI), இந்தியாவின் சிக்கோயா காப்பிட்டல் போன்ற நிறுவனங்கள் ஸிலிங்கோவில் முதலீடு செய்துள்ளன.
கடந்தகாலத்தில் தமக்கு தொல்லை தரப்பட்ட சம்பவங்களை திருவாட்டி போஸ் நிறுவனத்தின் நிர்வாக மன்றத்திடம் எழுப்பியதாகவும் வெளிநிறுவனத்தைக் கொண்டு அது குறித்து விசாரித்துள்ளதாகவும் ஸிலிங்கோ கூறியது.
அந்த தொல்லைப் புகார்களை தடுப்பதற்குத்தான் திருவாட்டி போஸ் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்று குறிப்பிடும் ஊடகச்செய்திகளுக்கு மாறாக அந்தச் சம்பவங்களைப் பற்றி தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிறுவனம் கூறியது.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த திருவாட்டி போஸ், அமெரிக்காவில் சிலகாலம் பணியாற்றிவிட்டு சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு ஸிலிங்கோவைத் தொடங்கினார்.
அவருடன் சேர்ந்து ஸிலிங்கோவை தொடங்கிய திரு துருவ் கபூர், நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

