தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1.3 மி. மதிப்புள்ள கிட்டத்தட்ட 18 கிலோ போதைமிகு அபின் பிடிபட்டது

1 mins read
90e5dbbf-2d5e-4aa3-be2c-4a1843b534d2
உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் புதன்கிழமை (மே 18) அன்று சுமார் 17.7 கிலோ போதைமிகு அபினுடன் 261 கிராம் ஐஸ் போதைமாத்திரைகளும் 2 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகளும் பிடிபட்டன. படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -

சிங்கப்பூர் அதிகாரிகள் கிட்டத்தட்ட 18 கிலோ போதைமிகு அபினை உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் கைப்பற்றியுள்ளனர்.

அதன் தொடர்பில் 23 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று மலேசிய ஆடவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் புதன்கிழமை (மே 18) அன்று சுமார் 17.7 கிலோ போதைமிகு அபினுடன் 261 கிராம் ஐஸ் போதைமாத்திரைகளும் 2 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகளும் பிடிபட்டன.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு சுமார் 1.295 மில்லியன் வெள்ளியாகும்.

குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் வெள்ளிக்கிழமை (மே 20) அன்று இணைந்து விடுத்த அறிக்கையில் இதைத் தெரிவித்தன.

மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட காரில் புதன்கிழமை (மே 18) அன்று போதைப் பொருளை குடிநுழைவு சோதனைச்சாவடி அதிகாரிகள் கைப்பற்றினர்.

காரை ஓட்டிய மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

மறு நாள் காலை மேலும் இரண்டு பேர் பிடோக் நார்த் ஸ்ட்ரீட் ஒன்றில் கைது செய்யப்பட்டனர்.

அந்த இரண்டு பேரும் போதைப் பொருளைப் பெற இருந்தனர்.

கிட்டத்தட்ட 8,340 பேர் ஒருவாரத்திற்கு உட்கொள்ளும் போதைமிகு அபினும்,150 பேருக்கான ஐஸ் மாத்திரைகளும் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.