அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த புதனன்று குரங்கம்மைத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கனடாவில், இருவரிடம் அத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் குரங்கம்மை பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
சின்னம்மை போன்ற அரிதாக ஏற்படக்கூடிய கிருமித்தொற்றான பெரும்பாலும் மத்திய, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படுவது வழக்கம். முதன்முதலில் 1970களில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் குரங்கம்மை கண்டறியப்பட்டது.
காய்ச்சல், தலைவலி, முகத்தில் தொடங்கி உடல் முழுவதும் தோலில் தடிப்பு உள்ளிட்டவை குரங்கம்மைக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.
இந்த நோய்க்கிருமி மனிதர்களிடையே எளிதாகப் பரவாது என்றும் பரந்த அளவில் பொதுமக்களிடையே பரவும் அபாயம் குறைவு என்றும் கூறப்படுகிறது.
இம்மாதம் 7ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர் அண்மையில் நைஜீரியா சென்று வந்தவர். பிரிட்டனில் இதுவரை ஒன்பது பேருக்குக் குரங்கம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவீடனில் ஒருவருக்கு அந்நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இத்தாலியிலும் பிரான்சிலும் தலா ஒருவர் அதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

