கொவிட்-19, உக்ரேனில் நடைபெறும் போர், குரங்கம்மை உள்ளிட்ட பெரிய சவால்களை உலகம் எதிர்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உலக சுகாதாரக் கூட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கிவைத்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
"கொவிட்-19 பெருந்தொற்று, நம் உலகம் எதிர்கொள்ளும் ஒரேயொரு நெருக்கடியல்ல.
"நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், ஜனநாயக காங்கோ குடியரசில் எங்களுடைய சகாக்கள் இபோலாவை எதிர்கொள்கின்றனர். குரங்கம்மை தொற்று பரவுவதோடு, கல்லீரல் அழற்சியும் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, உக்ரேன், ஏமன் ஆகிய நாடுகளில் சிக்கலான மனிதநேய நெருக்கடிநிலை இருக்கிறது.
"நோய்ப் பரவல், வறட்சி, பஞ்சம், போர், பருவநிலை மாற்றம், நியாயமற்ற நிலை ஆகிய சவால்மிக்க சூழல்களை நாம் எதிர்நோக்குகிறோம்," என்று டாக்டர் டெட்ரோஸ் விவரித்தார்.
இதற்கிடையே, ஆப்பிரிக்காவுக்கு வெளியே 15 நாடுகளில் குரங்கம்மை பரவியிருப்பது குறித்து உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் கலந்தாலோசித்தனர்.
ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய பகுதிகளில் 80க்கும் மேற்பட்டோரிடம் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும், அது மேலும் பரவக்கூடிய சாத்தியம் குறைவு எனக் கூறப்படுகிறது.
மத்திய, மேற்கு ஆப்பிரிக்காவில் நெடுந்தொலைவில் உள்ள பகுதிகளில் வசித்து வந்தோரிடம் இதற்கு முன்னர் குரங்கம்மை கண்டறியப்பட்டு வந்துள்ளது. மனிதர்களுக்கு இடையே அவ்வளவு எளிதில் பரவும் தன்மை கொண்டிராத குரங்கம்மைக்கான அறிகுறிகள் பொதுவாக லேசானதாக இருக்கும்.
குரங்கம்மை தொற்றியோரில் பெரும்பாலானோர் ஒரு சில வாரங்களில் குணமடைந்து விடுவதாக பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை குறிப்பிட்டுள்ளது.
மேலும் பலரை குரங்கம்மை தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக முன்னதாகத் தெரிவித்திருந்த உலக சுகாதார நிறுவனம், கூடுதலானோருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்படலாம் எனக் கூறியிருந்தது.
பிரிட்டனில் முதன்முறையாக குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
பிரிட்டனில் சமூக அளவில் குரங்கம்மை பரவிவருவதாக அந்நாட்டு சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் கூறினார். தொற்றுக்கு ஆளானவர்கள், மேற்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்று வந்தவர்களுடன் தொடர்பில் வரவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

