ஜப்பானிய ஊடகக் குழுமம் நிக்கேய்க்கு அளித்த பேட்டியில் பிரதமர் லீ கருத்து
உலகப் பொருளியல் தற்போது அதிக பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொருளியல் மந்தநிலைக்கு வித்திடக்கூடும்.
என்றாலும், உலகிற்குப் பணவீக்கம் கடுமையான பிரச்சினையாகிவிடும் என்பதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் இந்த வாரம் ஆசியாவின் எதிர்காலம் குறித்த அனைத்துலக மாநாட்டில் பிரதமர் லீ கலந்துகொள்ள இருக்கும் வேளையில், ஜப்பானிய ஊடகக் குழுமமான நிக்கேயிடம் கடந்த வெள்ளிக்கிழமை அவர் பேசியபோது இவ்வாறு கூறினார்.
நிக்கேயில் நேற்று வெளியிடப்பட்ட இந்த நேர்காணலில் பேசிய அதன் முதன்மை ஆசிரியரான டெட்சுயா இகுச்சி, மத்திய வங்கிகள் அவற்றின் நாணயக் கொள்கையைக் கடுமையாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டினார். இது, பொருளியல் வளர்ச்சியையும் உலகளாவிய நிதிச் சந்தையையும் எதிர்மறையாக பாதிக்கக்கூடும் என்றார் அவர்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் லீ, எவரும் எதிர்பார்க்காத விதத்தில் கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளியல் மீட்சியடைந்ததாகச் சொன்னார். பொருளியல் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது இதற்கு ஒரு காரணம்.
"என்றாலும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொருளியல் மீட்சியடைந்து வந்தபோதும், அரசியல் காரணங்களுக்காக ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தாராளமாக செயல்படுத்தப்பட்டன," என்று கூறிய பிரதமர் லீ, உக்ரேனில் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே பணவீக்கம் உயர்வதற்கு இது காரணமாக விளங்கியதாகச் சொன்னார்.
"இப்போது இந்தப் போர், நிலவரத்தை இன்னும் மோசமாக்கியுள்ளது. ஏனெனில், எரிசக்தி விநியோகத்திற்கு அது இடையூறு விளைவித்துள்ளது. உலகச் சந்தையில் ரஷ்ய எரிசக்திக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவு விநியோகம், தானியங்களுக்கு அது இடையூறு ஏற்படுத்தியுள்ளது," என்றார் பிரதமர் லீ.
ஓராண்டிற்கு முன்பு, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு மத்திய வங்கிகள் அவ்வளவாக கவலைப்படவில்லை என்பதை அவர் சுட்டினார். சொல்லப் போனால், பணச் சுருக்கம் குறித்தே அவை கவலைப்பட்டன.
"அப்போது அவை மெத்தனமாக இருந்ததாக நான் நினைக்கிறேன். ஆனால், அவற்றின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. அவை அவ்வாறு செய்யத் தொடங்கிவிட்டன என நான் நம்புகிறேன்," என்று பிரதமர் லீ விவரித்தார்.
ஆனால், தற்போது பணவீக்கம் அதிகமாக இருப்பதால், அதைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றார் அவர்.
பொருளியல் சக்திகள் தற்போது ஒத்துழைக்காததை பிரதமர் லீ ஏற்றுக்கொண்டார். உலகப் பொருளியலுக்கு மட்டுமல்லாமல், பருவநிலை மாற்றம், அணுவாயுத மிரட்டல் போன்ற இதர விவகாரங்களுக்கும் அது பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
"அனைத்துலக ஒத்துழைப்பு இல்லாமல், மானிடம் எதிர்நோக்கும் இந்தப் பொதுவான பிரச்சினைகளை உங்களால் சமாளிக்க இயலாது," என்றார் அவர்.
மேலும் செய்திகள் பக்கம் 2ல்

