இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சிங்கப்பூருக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், வருகையாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு முழுமைக்குமான எண்ணிக்கையைவிட அதிகம்.
சிங்கப்பூரில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, ஏப்ரல் மாத வருகையாளர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை மொத்தம் 540,430 பேர் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 294,300 பேர் கடந்த மாதம் வந்தவர்கள் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
இதுவே 2021ஆம் ஆண்டு முழுமைக்குமான வருகையாளர்எண்ணிகை 329,990 ஆகும். ஏப்ரல் மாதத்தின் வருகையாளர் எண்ணிக்கை 2020 பிப்ரவரிக்குப் பிறகு ஆக அதிகமானதாக இருந்தாலும், 2019 பிப்ரவரி மாத வருகையாளர் எண்ணிக்கையான 1.5 மில்லியனில் இது சிறு பகுதிதான்.
தென்கிழக்கு ஆசியா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, தென்கொரியா போன்ற ஏற்கெனவே எல்லைகளைத் திறந்துள்ள நாடுகள், வட்டாரங்களில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை வேகமாக அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.
சீனாவும் ஜப்பானும் முக்கிய சந்தைகளாக இருந்தபோதிலும் அவை இன்னமும் எல்லைகளை மூடியிருப்பதால் அங்கு குறைந்தளவே கவனம் செலுத்துவதாக கழகம் கூறியது.
சந்தைப்படுத்தல் முயற்சிகள், ஏற்கெனவே உள்ள சுற்றுலாத் தலங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட, அடுத்த சில ஆண்டுகளில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அரை பில்லியன் வெள்ளிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய மற்றும் நீண்ட கால சந்தைகளில் சம அளவிலான முயற்சிகளைக் கட்டிக்காத்து வருவதாக பயணத்துறைக் கழகத்தின் சந்தைப்படுத்தல் குழுவின் உதவி தலைமை நிர்வாகி திரு சாங் சீ பே ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்லைகள் மூடப்பட்டிருந்த போதும் கழகம் தனது முயற்சிகளைத் தொடர்ந்தது.
"இந்த பன்முகத்தன்மை சிங்கப்பூரின் சுற்றுலாத் துறை மீட்சிக்கு துணைபுரிவதுடன் சிங்கப்பூர் தாக்குப்பிடிக்கும் இடமாக இருப்பதை உறுதி செய்யும்," என்றார் அவர்.
நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவைப்படும்போது சந்தைப்படுத்தல் முயற்சிகளை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆண்டு அடிப்படையில் 2016க்கும் 2019க்கும் இடையே 3.3%, 7.7% என்ற விகிதத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வந்தது. கொள்ளைநோய் பரவல் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. பயணிகள் வருகை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
தொற்றுநோய்க்கு முன்னர் அதிகமான பயணிகள் வரும் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றான சீனா தொடர்ந்து மூடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்றார் அவர். 2019இன் மொத்த வருகையில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டைக் கொண்ட சீன நாட்டினரின் வருகை இல்லாமல் முழு மீட்பு சாத்தியமில்லை என்று பரவலாகக் கருதப்படுகிறது.
2019 பிப்ரவரியில் 339,550 ஆக இருந்த சீனப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 5,000 ஆகவே இருந்தது.
இந்தியா தனது எல்லைகளை முன்னதாகவே திறந்ததால் மார்ச் மாதத்தில் இந்தியப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்திற்குள் இதை இந்தோனீசியப் பயணிகள் எண்ணிக்கை முறியடித்தது. தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் இந்தியாவைவிட மிகவும் வலுவான சந்தையாக இது இருந்து வந்துள்ளது.
இந்திய பார்வையாளர்களை சிங்கப்பூர் மெய்நிகர் சாகசத்திற்கு அழைத்துச் செல்லும் சித்திரத் தொடரான சோட்டா பீம் போன்ற முயற்சிகளை கடந்த ஈராண்டுகளாக கழகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் சிங்கப்பூரைப் பிரபலப்படுத்த நேரலைத் தளங்கள், ஊடகங்கள் போன்றவற்றுடன் செயல்பட்டு வருகிறது.
ஏற்கெனவே எல்லைகளைத் திறந்துவிட்ட நாடுகளை ஈர்ப்பதில் கழகம் சரியான அணுகுமுறையை எடுத்து வருவதாக மாஸ்டர்கன்சல்ட் சர்வீசஸ் என்ற பயணத்துறை ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு கிறிஸ்தபர் கூ கூறினார்.

