சீனக் கப்பல்களின் நடைமுறை குறித்து கவலை அதிகரித்து வரும் நிலையில் சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டத்தில் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்காவும் இணைந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட இந்த ஐந்தாண்டு கால முயற்சியானது, இந்திய-பசிபிக் வட்டாரத்தில் சட்டவிரோத கப்பல் நடவடிக்கைகள், மீன்பிடித்தல் கண்காணிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தோ பசிபிக் கடற்துறை விழிப்புணர்வுத் திட்டத்தின் அறிமுகம் பற்றிய அறிவிப்பு, இந்நான்கு நாடுகள் நடத்தும் இரண்டாவது சந்திப்பின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தோ பசிபிக் வட்டார நாடுகளையும் இந்தியப் பெருங்கடல், தென்கிழக்காசியா, பசிபிக் தீவுகள் ஆகிய வட்டாரங்களில் உள்ள தகவல் இணைவு நிலையங் களையும் ஆதரிக்கவும் ஆலோசனையுடன் இணைந்து செயல்படவும் அந்நான்கு தலைவர்கள் கூட்டறிக்கையின்மூலம் தெரிவித்தனர்.
வளப்பத்தையும் நிலைத்தன்மையையும் ஊக்குவிக்க இந்நாடுகள், கடல்துறை சார்ந்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் பயிற்சியையும் வழங்கவுள்ளன.
சுதந்திரமான, தாராளமயமான இந்தோ-பசிபிக் வட்டாரத்திற்காக ஒன்றிணைந்து செயல்படவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் 'குவாட்' நாடுகளின் நான்கு தலைவர்களும் நேற்று உறுதிபூண்டனர்.
இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து 2007ஆம் ஆண்டில் 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கின.
ஜப்பான் தலைநகரில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்ச மாநாட்டில் நேற்று இந்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.
மாநாட்டின் முக்கிய அம்சமாக, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணை, இந்தோனீசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளியல் வளர்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பக்கம் 10

