சுரங்கம் ஒன்றைத் தோண்டிய கிராமத்துப் பெண் ஒருவருக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புடைய வைரக்கல் கிடைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டம் வைரச் சுரங்கங்களுக்குப் பிரபலமான இடம். இங்கு கிட்டத்தட்ட 12 லட்சம் கேரட் வைரக்கற்கள் புதைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இங்குள்ள சுரங்கங்களில் அவ்வப்போது சிறுசிறு வைரக்கற்கள் சிலருக்குக் கிடைப்பதுண்டு.
அந்த வகையில், கிருஷ்ண கல்யாண்பூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த சமேலி பாய், ஆழம் குறைந்த வைரச்சுரங்கம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் வைரக்கல் ஒன்று அவரது கண்ணில் தென்பட்டது. உடனடியாக அதனை எடுத்து தமது கணவரிடம் காண்பித்தார் அவர்.
இருவரும் நேற்று முன்தினம், வைரக்கல் ஆய்வு அலுவலகத்தில் அந்த வைரத்தை ஒப்படைத்தனர். இந்த விவரத்தை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அந்த 2.08 கேரட் வைரத்தின் மதிப்பு கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் என்று பன்னா மாவட்ட வைரக்கல் ஆய்வு அலுவலக அதிகாரி அனுபம் சிங் தெரிவித்தார்.
அடுத்து நடக்க இருக்கும் ஏலத்தில் வைரக்கல் வைக்கப்படும் என்றும் ஏலத்தொகை அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு இணங்க நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏலத்தில் கிடைக்கும் தொகையிலிருந்து உரிமைத்தொகை (ராயல்டி) மற்றும் வரிகள் போக எஞ்சிய பணம் சமேலி பாயிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வைரக்கல் மூலம் கிடைக்கும் பணத்த்தைக் கொண்டு வீடு ஒன்றைக் கட்ட ஆசைப்படுவதாக இந்தப் பெண்ணின் கணவர் அரவிந்த் சிங் கூறினார்.
இதற்கு முன்னர், இவ்வாண்டின் பிப்ரவரி மாதம் 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 26.11 வைரக்கல்லை ஆடவர் ஒருவர் கண்டெடுத்தார். இதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 8.22 கேரட் வைரக்கல் நான்கு தொழிலாளி
களுக்கு புதையலாகக் கிடைத்தது. இதனால், சிறு சிறு வைரச் சுரங்கங்களை சிலர் குத்தகைக்கு எடுத்து தங்களது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்கின்றனர்.

