ரஷ்யாவுடன் பூச்சாண்டி விளையாடுவதை நிறுத்திவிட்டு அந்த நாட்டுக்கு எதிராக மேலும் கடுமையான தடைகளை விதித்து போரை முடிவுக்குக்கொண்டு வரும்படி மேற்கு நாடுகளை உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
உக்ரேன் தொடர்ந்து சுதந்திர நாடாக இருந்து வரும் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் அதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதுதான் தெரியவில்லை என்றார்.
ரஷ்யாவின் எண்ணெய்க்குத் தடை விதிக்கும் சாத்தியம் பற்றி ஆராய ஐரோப்பிய ஒன்றியம் மெதுவாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாள்களாகவே மேற்கு நாடுகளை உக்ரேனிய அதிபர் குறைகூறி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, உக்ரேன் போர் காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டு இருக்கும் தடைகளை மேற்கு நாடுகள் அகற்ற வேண்டும் என்று மாஸ்கோ கேட்டுக்கொண்டது.
போர் காரணமாக மில்லியன் கணக்கான டன் உணவு தானியங்களையும் இதர வேளாண்மை பொருள்களையும் ஏற்றுமதி செய்ய முடியாமல் உக்ரேன் தடுமாறுகிறது.
இதனால் உலகளவில் உணவுப்பொருள் நெருக்கடி அதிகமாகி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புட்டின் இத்தாலிய பிரதமரிடம் ஓர் உறுதி வழங்கினார்.
ரஷ்யா மீது மேற்கு நாடுகள் விதித்து இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும் என்றும் அப்படிச் செய்தால் ரஷ்யா உணவு தானியங்களையும் உரத்தையும் அதிகமாக ஏற்றுமதி செய்து உணவு நெருக்கடியைத் தீர்க்க கணிசமான அளவுக்கு உதவும் என்றும் புட்டின் குறிப்பிட்டதாக மாஸ்கோ தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், உக்ரேனின் கிழக்கு டோன்பாஸ் பகுதியில் இனப்படுகொலை செய்ய மாஸ்கோ விரும்புவதாக அதிபர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தினார்.
இதனிடையே, உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இருக்கும் லேமான் என்ற நகரை தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் தெரிவித்தனர்.

