குரங்கம்மை, கொவிட்-19 போன்று பெருந்தொற்றாக உருவெடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்றாலும் சிங்கப்பூரில் குரங்கம்மை எவருக்காவது தொற்றினால் அது பற்றி வியப்படைய தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரர்கள் பல இடங்களுக்கும் பரவலாக பயணம் மேற்கொள்கிறார்கள். சிங்கப்பூர் வர்த்தக, அனைத்துலக மையமாக இருக்கிறது. ஆகையால் சிங்கப்பூரில் வரும் வாரங்களில் யாருக்காவது குரங்கம்மை கிருமி தொற்றினால் அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை என்று ஃபேஸ்புக்கில் அவர் தெரிவித்தார்.
நல்ல வேளையாக சிங்கப்பூரில் இப்போது தேவையான முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் பொதுச் சுகாதார நடைமுறைகளும் நடப்பில் இருக்கின்றன.
2019ல் கொவிட்-19 கிருமி சிங்கப்பூரில் நுழைந்ததை அடுத்து அந்த நடைமுறைகள் பலப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
குரங்கம்மை என்பது ஒரு வகை தொற்றுநோய்தான். அது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. உலகளவில் 20 நாடுகளில் 200 பேருக்கு அந்தக் கிருமி தொற்றி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
திரு ஓங், உலக சுகாதார பேரவைக் கூட்டத்தில் அண்மையில் கலந்துகொண்டார். குரங்கம்மை தொற்று பற்றி அந்தக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டினார்.
குரங்கம்மை கிருமி ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் காணப்படும் ஓர் அரிய தொற்று நோயாக இருந்து வந்தது.
ஆனால், இந்த நிலை மாறிவிட்டது. இப்போது உலகின் பல பகுதிகளிலும் மனிதர்களிடம் இருந்தே மனிதர்களுக்கு அந்தக் கிருமி பரவத் தொடங்கிவிட்டது.
குரங்கம்மை கிருமி தொற்றி இருப்போருக்கு மிக அருகில் ஒருவர் சென்றால் அந்தக் கிருமி அவருக்கும் பரவிவிடும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
யாருக்காவது வெளியே விளக்க முடியாதபடி திடீரென்று உடலில் தடிப்பு தென்பட்டால் அவர் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். அண்மையில் வெளி நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்றாலும்கூட உடலில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும். இப்படி செய்தால் விரைவில் குணமடைய வாய்ப்புண்டு என்று அமைச்சர் ஆலோசனை கூறினார்.
குரங்கம்மை என்பது பொதுவான அம்மை நோயைப் போன்றதுதான். ஆனால், குரங்கம்மை தொற்றினால் ஏற்புடைய சிகிச்சையைப் பெற்று மற்றவர்களுக்கு அது தொற்றாமல் இருப்பதை உறுதிப்படுத்திவிடலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, குரங்கம்மை கிருமி வழக்கமாக காணப்படும் நாடுகளில் மட்டுமின்றி இதர பல நாடுகளிலும் அந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டு இருப்பதை உலக சுகாதார நிறுவனம் சுட்டியது.
அது, மக்கள் கவலைப்படும் அளவுக்கு வேகமாகப் பரவும் ஒரு நோய் அல்ல என்றாலும் அந்தக் கிருமித்தொற்று மெதுவாக சமூகப் பரவலாக மாறிவிடக்கூடிய ஆபத்து உண்டு என்று அந்த நிறுவனம் எச்சரித்து இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்துவதே குரங்கம்மை பரவலைத் தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை என்று அந்த உலக அமைப்பு தெரிவித்து உள்ளது.
வரும் நாட்களில் குரங்கம்மை மேலும் பலரை தொற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

