இந்தியாவில் 2020-2021ஆம் ஆண்டு நிலவரப்படி மாநில அரசியல் கட்சிகளில் தமிழ்நாட்டை ஆளும் திமுகதான் ஆகப் பணக் காரக் கட்சி என்பது தெரிய வந்துள்ளது.
மாநிலக் கட்சிகளின் வருவாயில் 28% திமுகவைச் சேர்ந்தது. எல்லா கட்சிகளும் செலவு செய்த மொத்தத் தொகையில் பாதிக்கும் அதிக தொகையை திமுக செலவு செய்துள்ளது. இந்தியாவில் முக்கியமாக 54 மாநில அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவை ஆண்டுதோறும் தங்கள் வரவுசெலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
இருந்தாலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய மாநில கட்சிகள் உள்ளிட்ட 23 கட்சிகள் வரவுசெலவுக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை.
அதையடுத்து எஞ்சிய 31 கட்சிகளின் கணக்குகளை ஒப்பிட்டு ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 2020-21ல் 31 மாநிலக் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.529.41 கோடி. அவற்றின் மொத்தச் செலவு ரூ.414.02 கோடி என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அதில் திமுகவின் வருவாய் ரூ.149.95 கோடி என்றும் அதன் செலவு ரூ.218.49 கோடி என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வருவதற்கு முந்திய ஆண்டான 2019-2020ஆம் நிதி ஆண்டில் அந்தக் கட்சியின் வருமானம் ரூ.64.90 கோடியாக இருந்தது. அது கடந்த ஆண்டில் 131% அதிகரித்தது.
மாநில கட்சிகளிலேயே அதிக வருவாயைப் பொறுத்தவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் (ரூ.107.99 கோடி) இருக்கிறது. பிஜு ஜனதா தளம் (ரூ.73.34 கோடி) மூன்றாவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக 2019-2020ல் ரூ.89 கோடி வருமானம் ஈட்டியது. ஆனால் சென்ற நிதி ஆண்டில் அந்த வருவாய் ரூ.34 கோடியாகக் குறைந்துவிட்டது. அதிமுக ரூ.54.76 கோடியை செலவு கணக்காகத் தாக்கல் செய்து இருக்கிறது.
அதேவேளையில், மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வருவாய் கொஞ்சம் அதிகரித்து முறையே ரூ.2.86 கோடியாகவும் ரூ.1.16 கோடியாகவும் கூடியது. அரசியல் கட்சிகள் தங்களுக்குக் கிடைத்த வருவாயில் கிட்டத்தட்ட பாதி அளவு தேர்தல் பத்திரங்கள் மூலம் கைக்கு எட்டியதாகக் கூறின. (ஒரு கோடி ரூபாய் சுமார் $178,571).

