நேப்பாளத்தில் 22 பேருடன் காணாமல் போன தனியார் விமானம் முஸ்தாங் எனும் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வட்டாரத்தில் உள்ள கோவாங் எனும் கிராமத்தில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.
மணபதி மலையில் உள்ள லாம்ச்சே ஆற்றங்கரையில் விமானம் விழுந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறியதாக நேப்பாள ராணுவம் தெரிவித்தது.
யாரும் உயிர்பிழைத்ததாக தகவல் ஏதும் இல்லை.
அந்த சிறிய விமானத்தில் மும்பையைச் சேர்ந்த ஓர் இந்திய குடும்பம் இருந்தது. அவர்கள் நான்கு பேருடன், இரண்டு ஜெர்மானியர்கள், 13 நேப்பாளிகள் இருந்தனர்.
மீட்புப் பணிகளுக்காகச் சென்றிருந்த ஹெலிகாப்டர்கள் மோசமான பருவநிலை காரணமாக திரும்பிச் சென்றுவிட்டன.
தாரா விமான நிறுவனத்தின் அந்த சிறிய விமானம் 43 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது.
நேப்பாளத்தின் போக்காராவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 12.10 மணி) விமானம் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதற்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தளத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

