இலங்கைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசாங்கம் தேவை என்றும் அப்போதுதான் கொள்கைகள் நிலைப்படும் என்றும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
இலங்கை வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வரும் இந்தத் தருணத்தில் நாடு தலைதூக்க புதிய தேர்தல்தான் வழி என்று சமாஜ் ஜன பாலவேகயா என்ற எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பேட்டியில் கூறினார்.
"மக்கள் தேர்தல்களை விரும்புவதில்லை. அவர்கள் தீர்வையே விரும்புகிறார்கள். ஆனால் இப்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமானால் புதிய தேர்தல் ஒன்றுதான் வழி," என்று புளூம்பர்க் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
"மக்கள் படும் சிரமங்கள்தான் மிகுந்த கவலை அளிக்கிறது. மக்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுதான் இப்போது முதல் காரியமாக இருக்கவேண்டும்," என்று அவர் கூறினார்.
மிக முக்கியமாக கொள்கைகள் நிலைப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
இலங்கையில் படுமோசமான பொருளியல் நெருக்கடி இப்போது நிலவுகிறது. விலைவாசி 40% அதிகரித்துவிட்டது. எரிபொருள், மருந்து, மின்சாரம் எதுவுமே போதிய அளவுக்கு இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.
கடும் கோபமடைந்த அவர்கள் போராட்டங்களில் இறங்கிவிட்டனர்.

