உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த புதிய பட்டதாரிகளை பிரிட்டிஷ் நிறுவனங்கள் வேலையில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கும் வகை யில் ஒரு புதிய விசா திட்டம் நடப்புக்கு வந்திருக்கிறது.
அதன்கீழ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து அண்மையில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பிரிட்டனில் வேலை தேடலாம்.
பிரிட்டனின் 'உயர் ஆற்றல் தனிநபர் விசா' என்ற அந்தப் புதிய விசா ஏற்பாட்டை இன்று திங்கட்கிழமை முதல் பட்டதாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிங்கப்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனை உலகளவில் போட்டித்திறன்மிக்க நாடாக ஆக்க வேண்டும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் இப்போது பரந்த அளவிலான உத்தி ஒன்றை வகுத்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அந்த விசா திட்டம் இடம்பெறுகிறது.
பிரிட்டனுக்கு வெளியே தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்து கடந்த ஐந்தாண்டுகளுக்குள் பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு இந்தப் புதிய விசா திட்டம் வாய்ப்புகளை வழங்குகிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சின் தலைசிறந்த உலகப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் மேசசூசட்ஸ் தொழில்நுட்பப் பயிலகம், ஹார்வர்ட், ஸ்டான்ஃபர்ட், கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகம், சீனாவின் பீகிங் பல்கலைக்கழகம், சின்குவா பல்கலைக்கழகம், ஜப்பானின் தோக்கியோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலவும் அந்தப் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன.
புதிய விசா திட்டத்தில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்கும் உலக மாணவர்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய மாணவர்களுக்கு பிரிட்டன் பட்டதாரி விசா திட்டத்தின்கீழ் விசா வழங்கப்படுகிறது. அவர்கள் பிரிட்டனில் பட்டப் படிப்பை முடித்ததும் தொடர்ந்து குறைந்தபட்சம் ஈராண்டுகள் அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம்.
உயர் ஆற்றல் தனிநபர் விசாவை பெறுவதற்குத் தகுதி பெறும் பட்டதாரிகள் உலகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை அல்லது பிஎச்டி படித்து இருக்கவேண்டும். அதோடு, ஆங்கில மொழிப் புலமை தொடர்பான நிபந்தனைகளையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்சம் $2,200 பணம் வைத்து இருக்கவேண்டும்.
இந்த விசாவைப் பெறுவதற்கு ஏற்கெனவே வேலை வாய்ப்பை பெற்றிருக்க வேண்டிய தேவை இல்லை. பிரிட்டனில் தரையிறங்கிய பின்பு இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு இரண்டாண்டு காலம் விசா வழங்கப்படும். அவர்கள் வேலை தேடிக்கொள்ளலாம்.
பிஎச்டி படித்தவர்களுக்கு மூன்றாண்டு காலம் விசா வழங்கப்படும். இந்த விசாவை பெறுவோர் எந்தத் துறையில் வேண்டுமானாலும் வேலை தேடலாம்.
புதிய விசா திட்டம் அனுமதிக்கிறது