நேப்பாளத்தில் தனியார் நிறுவனம் நடத்தும் விமானம் ஒன்று நேற்று 22 பேருடன் விழுந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் இந்தியர்கள் நால்வர் இருந்ததாகக் கூறப்பட்டது. நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 200 கி.மீ. வடமேற்கே உள்ள பொக்காரா என்ற நகரிலிருந்து காலை 9.50 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம், ஜோம்சோம் என்ற நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியது.
ஆனால் வழியில் விமானம் முஸ்தாங் என்ற மாவட்டத்தில் குவோங் என்ற கிராமத்தில் விழுந்துவிட்டதாகவும் மீட்புப் படையினர் அங்கு விரைவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் லாம்சே என்ற ஆற்று முகத்துவாரத்தில் விழுந்தது என்று குவோங் கிராம மக்கள் நேப்பாள ராணுவத்திடம் கூறினர்.
தேடுதல், மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாக காட்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்னதாக தெரிவித்தது.
'டாரா ஏர்' என்ற நிறுவனம் அந்த விமானத்தை நடத்தி வந்தது.
புறப்பட்ட பிறகு 15 நிமிடங்கள் கழித்து விமானம் தொடர்பை இழந்துவிட்டது என்று சுதர்ஷன் பர்த்துவாலா என்ற டாரா ஏர் பேச்சாளர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விமானத்தில் 19 பயணிகளும் மூன்று ஊழியர்களும் இருந்தனர். பயணிகளில் நான்கு இந்தியர்களும் ஜெர்மனியைச் சேர்ந்த இருவரும் 13 நேப்பாளப் பயணிகளும் அடங்குவர் என்று டாரா ஏர் நிறுவன அதிகாரி குறிப்பிட்டார். விமான ஊழி யர்கள் அனைவரும் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று மாலை வரை பயணிகள் கதி பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.
மாயமான விமானம் கனடாவில் தயாரிக்கப்பட்ட 'டுவின் ஒட்டர்' ரக விமானம் ஆகும்.

