இந்தியாவின் ஆகப்பெரிய வர்த்தக நாடாக சீனா இருந்து வந்தது. ஆனால் 2021-22 நிதி ஆண்டில் அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பொருளியல் உறவுகள் வலுவடைந்து வருவதையே இது காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2020-21ஆம் நிதியாண்டில் US$80.51 பில்லியன் ஆக இருந்தது.
அது 2021-22ஆம் நிதி ஆண்டில் US$119.42 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் US$51.62 பில்லியனில் இருந்து US$76.11 பில்லியனாகக் கூடியது.
அதேவேளையில், சுமார் US$29 பில்லியன் மதிப்பில் இருந்த இறக்கு மதிகள் 2021-22 நிதி ஆண்டில் US$43.31 பில்லியனாக உயர்ந்தன.
சீனாவுடன் கூடிய இந்தியாவின் இருவழி வர்த்தகம் 2021-22 நிதி ஆண்டில் US$115.42 பில்லியன்.
இது முந்திய நிதி ஆண்டில் US$86.4 பில்லியன் என்று இந்தியாவின் வர்த்தக அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுக்கான ஏற்றுமதிகள் முந்திய நிதி ஆண்டில் இருந்து கொஞ்சம் கூடி 2021-22 நிதி ஆண்டில் US$21.25 பில்லியனாக இருந்தன. அதேவேளையில், இறக்குமதி US$94.16 பில்லியனாக உயர்ந்தது.
இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் சீனாவுடன் கூடிய வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2021-22ஆம் நிதி ஆண்டில் US$72.91 பில்லியனாகக் கூடியது. இது முந்திய நிதி ஆண்டில் US$44 பில்லியனாக இருந்தது.
இதனிடையே, வரும் ஆண்டுகளில் அமெரிக்காவுடன் கூடிய இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று வர்த்தகத் துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவும் அமெரிக்காவும் பொருளியல் ரீதியில் உறவுகளை மேலும் பலப்படுத்தி வருவதை இதற்கான காரணமாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இது பற்றி கருத்துக் கூறிய இந்திய ஏற்றுமதி நிறுவனக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கலித் கான், இந்தியா உலகளவில் நம்பிக்கைக்குரிய வர்த்தகப் பங்காளியாக தலையெடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.
உலக நிறுவனங்கள் சீனாவை மட்டும் நம்பியிராமல் இந்தியா போன்ற இதர நாடுகளையும் உள்ளடக்கி தங்கள் வர்த்தகத்தை பலமுனைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா தலைமையிலான இந்தோ-பசிஃபிக் பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டில் இந்தியாவும் சேர்ந்துகொண்டு இருக்கிறது.
இது வர்த்தகம் மேலும் அதிகரிக்க உதவும் என்று திரு கான் தெரிவித்தார்.
இந்தியா அதிவேகமாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளியல் உள்ள நாடு. உலகின் மூன்றாவது ஆகப் பெரிய பயனீட்டுச் சந்தை இந்தியாவில் இருக்கிறது. மக்கள்தொகையும் இந்தியாவில் அதிகம்.
இவை எல்லாம் அமெரிக்க, இந்திய நிறுவனங்களுக்கு நல்ல அனுகூலமாக இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப மாற்றம், உற்பத்தி, வர்த்தகம், முதலீடு பலவற்றுக்கும் பொருத்தமானதாக அமெரிக்கா இந்தியாவை பார்க்கிறது என்று இந்திய தோட்ட நிர்வாகப் பயிலகத்தின் இயக்குநர் ராகேஷ் மோகன் ஜோஷி தெரிவித்தார்.
பட்டை தீட்டப்பட்ட வைரங்கள், மருந்துப் பொருள்கள், நகை, பெட்ரோலியம், பதப்படுத்தப்பட்ட மீன்கள் முதலானவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களில் முக்கியமானவை.
அதேபோல, பெட்ரோலியம், பட்டை தீட்டப்படாத வைரம், திரவ எரிவாயு, தங்கம், நிலக்கரி முதலானவை அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களில் அடங்கும்.
இந்தியா உலக வர்த்தகத்தில் ஒரு சில நாடுகளுடன் வர்த்தக உபரியைக் கொண்டு இருக்கிறது. அந்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

