சிங்கப்பூரில் இறுக்கமான ஊழியர் சந்தைக்கிடையிலும் கடந்த ஆண்டு பத்தில் ஏழு ஊழியர்
களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது. இதற்கு முந்திய ஆண்டு பத்தில் ஆறு பேர் சம்பள உயர்வு பெற்றிருந்தனர்.
ஒரே முதலாளியிடம் குறைந்தபட்சம் ஓராண்டு காலம் வேலை செய்த ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பள விகிதம் 2021ல் 3.9 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக மனிதவள அமைச்சு நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இது 2019ஆம் ஆண்டின் நில
வரத்தை ஒத்திருந்தது.
அத்துடன், 2020ஆம் ஆண்டைக்காட்டிலும் இது அதிகம். கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் மிகுந்திருந்த அந்த ஆண்டில் ஒட்டுமொத்த சம்பள வளர்ச்சி 1.2 விழுக்காட்டுக்கு சுருங்கியது.
தொழிற்கூடங்கள் விரிவான அளவில் பொருளியல் மீட்சி அடைந்ததும் ஊழியர் பற்றாக்
குறையும் சம்பளம் உயர்ந்ததற்கான காரணங்கள் என்று அமைச்சு தெரிவித்தது.
எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோது வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து குறைந்ததால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டது.
முதலாளிகளும் கடந்த ஆண்டு நல்ல பலனடைந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. பொருளியல் 7.6 விழுக்காடு வளர்ச்சி அடைந்த தால் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டு முதலாளிகள், அதாவது நான்கில் மூவர் லாபம் ஈட்டினர். இது 2020ஆம் ஆண்டில் 63 விழுக்காடாக இருந்தது.
கொள்ளைநோய் காரணமாக 2020ஆம் ஆண்டு ஊழியர்களிடம் அறிமுகம் செய்த சம்பள வெட்டை இந்த முதலாளிகள் மீட்கும் நிலையில் இருந்ததாகவும் அறிக்கை கூறியது.
எழுபது விழுக்காடு ஊழியர்கள் கடந்த ஆண்டு சம்பள உயர்வு பெற்றனர். 2020ஆம் ஆண்டு இது 60 விழுக்காடாக இருந்தது.
ஊழியர்களின் சம்பள வெட்டும் கடந்த ஆண்டு குறைந்து காணப்பட்டது. 2020ஆம் ஆண்டு 23% சம்பளம் வெட்டப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அது 10 விழுக்காடாகக் குறைந்தது.
கடந்த ஆண்டில் சம்பள உயர்வு 3.9 விழுக்காட்டுக்கு மீண்டாலும் உலக நிதி நெருக்கடியிலிருந்து மீண்ட 2010ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருந்தது. 2010ஆம் ஆண்டு சம்பள உயர்வு 5.7 விழுக்காடு வளர்ந்தது. மீட்சி விகிதம் குறைந்ததற்கு நிதி நெருக்கடி அளவுக்கு இல்லாமல் நீண்ட காலத்துக்கு கொள்ளைநோய் நீடித்தது ஒரு காரணம். பொருளியல் மீட்சியின்போது சம்பள உயர்வில் முதலாளிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர்.
சில்லறை வர்த்தகத் துறை சம்பள உயர்வு கடந்த ஆண்டு 5.5% என ஆக அதிகமான வளர்ச்சி கண்டது. 2020ஆம் ஆண்டு 2% மட்டும் இத்துறையில் சம்பள உயர்வு இருந்தது.
2021ஆம் ஆண்டு பொதுவாக எல்லாத் துறைகளிலும் சம்பள உயர்வு பதிவானது.
தகவல் தொடர்பு போன்ற துறைகளில் சம்பள உயர்வு 5.1 விழுக்காடாக இருந்தது. நிதி, காப்பீட்டுச் சேவைகளில் அது 4.1 விழுக்காடாகப் பதிவானது. உற்பத்தித் துறையில் 4% சம்பள உயர்வு காணப்பட்டது. இந்தத் துறைகள் சிங்கப்பூர் பொருளியல் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுக்குப் பங்களிக்கின்றன. வெளிப்புறத் தேவைகளின் வேகம் காரணமாக பலனடையக் கூடியனவாகவும் இவை உள்ளன.
கொள்ளைநோயால் மோச
மாகப் பாதிக்கப்பட்ட துறைகள், கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளதால் அதிகமான மனிதவளத்துக்கான தேவை மீண்டும் ஏற்படும் என்ற நோக்கில் சம்பளத்தை உயர்த்தின. உதாரணமாக, ஹோட்டல்கள், தங்குமிடங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய தங்குவிடுதித் துறையில் 1.7 விழுக்காடு சம்பள உயர்வு கடந்த ஆண்டு பதிவானது. 2020ஆம் ஆண்டு மோசமாகப் பாதிக்கப்பட்டதால் இத்துறையில் 5.3 விழுக்காடு சம்பளம் வெட்டப்பட்டது.
அதேபோல, போக்குவரத்துத் துறை 3% சம்பள வெட்டு என்
பதிலிருந்து மீண்டு கடந்த ஆண்டு 2.8% சம்பள உயர்வை அறிவித்தது. உணவு, பானத் துறையின் சம்பள உயர்வு 1.5 விழுக்காட்டிலிருந்து 2.6 விழுக்காட்டுக்கு வளர்ந்தது.
சம்பள உயர்வு இந்த ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு கூறியது. கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்படுவதால் ஊழியர் சந்தையின் இறுக்கம் தளரும் என்றும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் வரக்கூடும் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
இருப்பினும், ரஷ்யா-உக்ரேன் போரும் உலக விநியோகத் தொடரில் ஏற்படும் இடையூறுகளும் சம்பள உயர்வைப் பாதிக்கலாம். பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் சம்பள உயர்வின் வேகம் குறையலாம் என்றது அமைச்சு.
பொருளியல் வளர்ச்சியால் 4ல் 3 முதலாளிகள் லாபம் ஈட்டினர்

