மலேசியாவின் கோழி ஏற்றுமதித் தடை இன்றுமுதல் நடப்பிற்கு வருகிறது
புதிய கோழிகளை ஏற்றுமதி செய்ய மலேசியா அறிவித்திருந்த தடை இன்றுமுதல் நடப்பிற்கு வருகிறது.
இதனையடுத்து, ஈரச்சந்தைகளில் நேற்று பலரும் வழக்கத்தைவிட அதிக அளவில் புதிய கோழிகளை வாங்கிச் சென்றனர். மற்றவர்கள் தங்களுக்குத் தேவையான அளவு மட்டும் வாங்கிச் சென்றனர். புதிய கோழி கிடைக்கவில்லை எனில் உறைந்த கோழி அல்லது மற்ற இறைச்சிகளுக்கு மாறுவதில் தங்களுக்குச் சிரமமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
வேறு சிலர், மலேசியா விதித்த தடை நடப்பிற்கு வருமுன் கோழிச்சோறு உண்ணக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.
216 பிடோக் நார்த் சந்தையில் வழக்கமாக ஐந்து கோழிகள் வாங்கும் திருவாட்டி ஹான் ஜுன் யின், 42, நேற்றுப் பத்துக் கோழிகளை வாங்கிச் சென்றார்.
"எங்கள் வீட்டில் கோழிக்கறி அதிகமாக சமைப்போம். அதனால், போதிய கோழி கிடைக்காமல் போகுமோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. எங்கள் பணிப்பெண் பன்றி இறைச்சி உண்ணமாட்டார் என்பதால் என்னால் வேறு இறைச்சிக்கு மாற இயலாது," என்றார் அவர்.
வேறு சிலரோ, மலேசியாவின் தடையை எண்ணி அதிகம் கவலைப்படவில்லை.
"புதிய கோழி வரத்து இல்லை என்றால் அதைச் சாப்பிடாமல் நான் ஒன்றும் இறந்துவிட மாட்டேன். மாற்று உணவுப்பொருள்கள் ஏராளம் உள்ளன," என்றார் ஓய்வுபெற்ற தொழிலக ஊழியர் விக்டர் ஓங், 72.
அதே சந்தையில் ஒரு கோழியை மட்டும் வாங்கிச் சென்றார் விற்பனை முகவராகப் பணிபுரியும் திரு ஸ்டேன்லி இங், 47. "எனக்கு உறைந்த கோழியை விட புதிய கோழியே விருப்பம். ஆனாலும், அதற்காகப் புதிய கோழிகளை வாங்கி அடுக்கி வைப்பது தேவையற்றது," என்றார் அவர்.
யூனோஸ் கிரசென்ட் சந்தையில் இரு வாரங்களுக்கு ஒருமுறை கோழி இறைச்சி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள இல்லத்தரசி திரேசா கிரீன், 60, மலேசியாவின் ஏற்றுமதித் தடை நடப்பிற்கு வந்தபின் கோழிக்கறியைக் குறைத்துக் கொள்ளப்போவதாகக் கூறினார்.
"இந்தத் தடை என்னைப் பெரிதும் பாதிக்கும் என நினைக்கவில்லை. காய்கறி, மீன் போன்ற மற்ற உணவுவகைகளைச் சாப்பிடுவேன்," என்றார் திருவாட்டி திரேசா.
மலேசியாவில் கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலைகளும் உற்பத்தியும் நிலைப்படும்வரை, இன்றுமுதல் மாதத்திற்கு 3.6 மில்லியன் கோழிகள் வரையிலான ஏற்றுமதியை நிறுத்திவைக்கப் போவதாக அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த மாதம் 23ஆம் தேதி அறிவித்திருந்தார்.
மலேசியாவின் புதிய கோழி ஏற்றுமதித் தடையை இங்குள்ள கோழி விற்பனையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சற்று ஓய்வு எடுக்கப்போவதாக அவர்களில் சிலர் கூறினர்.
தோ பாயோ வெஸ்ட் சந்தை, உணவங்காடி நிலையத்தில் கோழி இறைச்சி விற்பனை செய்துவரும் திரு ஓங் ஹுவான் கூ, 73, இம்மாதம் தமது கடையை மூடப் போவதாகத் தெரிவித்தார்.
"பேரங்காடிகள் போன்ற பெரிய விற்பனைக் குழுமங்களுடன் எங்களால் போட்டிபோட முடியாது.அவர்கள் உறைந்த உணவுப் பொருள்களையேனும் விற்கலாம். ஆனால், ஈரச்சந்தையில் கடை வைத்துள்ள நாங்கள் பெரும்பாலும் புதிய கோழியை நம்பியே இருக்கிறோம்," என்றார் அவர்.
கோழிச்சோறு விற்கும் கடைகளும் இத்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய கோழி கிடைக்காது என்பதால் ஜூ சியாட்டில் டிக்சன் நாசி லெமாக் கடை இம்மாதம் முழுவதும் தற்காலிகமாக கடையை மூட இருக்கிறது.
இத்தகவலை அறிந்த அதன் வாடிக்கையாளர்கள் பலரும் நேற்று அங்கு படையெடுத்து, உணவு வாங்கிச் சென்றனர்.
இதற்கிடையே, முழுக் கோழியாக இல்லாமல் கோழியின் நெஞ்சு, இறக்கை என கிடைக்கும் கோழி இறைச்சி பாகங்களை வாங்கிக்கொள்ளும்படி கோழி இறைச்சி இறக்குமதியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

